உத்தரகன்னடா-தொடர் மழையால், உத்தரகன்னட மாவட்ட மக்கள் தத்தளிக்கின்றனர். குறிப்பாக துணி வியாபாரிகள், பெருமளவில் நஷ்டமடைந்துள்ளனர்.
மழையில் நனைந்த உடைகளை, குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதை வாங்குவதற்கு மக்கள் போட்டி போடுகின்றனர்.உத்தரகன்னடாவில், இரண்டு, மூன்று வாரங்களாக தொடர் மழை பெய்கிறது. ஆறு, குளம், ஏரி, கால்வாய்களில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. பட்கல் சுற்றுப்பகுதிகளில் நுாற்றுக்கணக்கான வீடுகள் , கடைகளில் தண்ணீர் நுழைந்தது.ஆகஸ்ட் 1ல், நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால், 'மினி துபாய்' என பிரசித்தி பெற்ற பட்கல், பொழுது விடிவதற்குள் வெள்ளத்தில் மூழ்கியது. அதே நாள் 33.5 செ.மீ., மழை பெய்தது. நுாற்றுக்கணக்கான கடைகளில் தண்ணீர் புகுந்ததால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைகள், செருப்பு, பேக், தின்பண்டங்கள், மொபைல், உட்பட, மற்ற கடைகளில் பொருட்கள் நீரில் நனைந்து பாழானது.தற்போது மழை குறைந்து, வெள்ளம் சிறிது சிறிதாக வடிந்ததால், கடைகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர். சில பொருட்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழான பொருட்களை வீசியெறிகின்றனர். உடை, செருப்பு, பெண்கள் பயன்படுத்தும் லெதர் கைப்பை, பர்ஸ் போன்ற பொருட்கள் நீரில் நனைந்ததால், நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்ய முடியாது; மிகவும் குறைந்த விலைக்கு விற்கின்றனர்.குறைந்த விலைக்கு கிடைக்கும் பொருட்களை, மக்கள் போட்டி போட்டு வாங்குவதை, பட்கலின் பல இடங்களில் காண முடிகிறது.