சென்னை:சாதாரண கட்டண அரசு பேருந்துகளை, பெண்கள் எளிதில் அடையாளம் கண்டு பயணிக்கும் வகையில், 'பிங்க்' நிற சேவை துவக்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில், சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் உள்ளது. இந்த வகை பேருந்துகளை, பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், அவற்றின் முகப்பு பகுதியில், 'பிங்க்' எனும் இளஞ்சிவப்பு நிறம் பூச அரசு முடிவெடுத்தது.
அதன்படி, முதல் கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் , 50 பிங்க் பேருந்துகளின் சேவையை, தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி சென்னையில் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றனர். படிப்படியாக மற்ற சாதாரண கட்டண பேருந்துகளிலும், பிங்க் நிறம் பூசப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு, பிங்க் நிறம் பூசப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, பல்வேறு பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில், 10 சிற்றுந்து சேவையையும் உதயநிதி துவக்கி வைத்தார். போக்குவரத்து துறை செயலர் கோபால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் பங்கேற்றனர்.