மாமல்லபுரம், :ஜெர்மனி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல் நிர்வாகம், 'கேக்' வெட்டி அனைவரையும் பூரிக்க வைத்தது.மாமல்லபுரத்தில் நடக்கும் சர்வதேச செஸ் போட்டியில் விளையாட, 187 நாடுகளைச் சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்துள்ளனர்.வீரர்கள் மற்றும் வீராங்கனையர், மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வீரர்களை கவரும் விதமாகவும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், ஹோட்டல் நிர்வாகம் அவ்வப்போது 'சர்ப்ரைஸ்' அளிக்கிறது. அந்த வகையில், நேற்று முன்தினமும் ஓர் ஆச்சரிய நிகழ்வை செய்து உள்ளது.நேற்று முன்தினம், துருக்கி நாட்டுக்கு எதிராக ஏழாவது சுற்றில் நடந்த போட்டியில் ஜெர்மனி நாட்டின் மகளிர் அணியினர் 3.5 -- 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.அவர்கள் வெற்றி பெற்றதை அறிந்த ஹோட்டல் நிர்வாகம், ஜெர்மனி அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, அவர்கள் விடுதிக்குள் நுழைந்ததும், கேக் ஒன்றை வழங்கியது.இதில் பூரித்துபோன ஜெர்மன் அணியினர், 'விருந்தோம்பலில் தமிழர்களை அடித்துக்கொள்ள முடியாதோ' என சிரித்தபடி கேக் வெட்டி, உற்சாகம் அடைந்தனர்.