சென்னை :சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னையில் பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.அதன்படி, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்ய, நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.இந்த தீவிர தேடுதலில், 22 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 73 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.அதேபோல் பழைய குற்றவாளிகளுக்கான சோதனையில், 462 குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர். அதில், இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 29 பேர் திருந்தி வாழ்வதற்கான நன்னடத்தை பிணை ஆணை பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜமாலுதீன், 46; நுங்கம்பாக்கத்தை சேர்ந்த தினேஷ்பாபு, 31, சூளைமேடைச் சேர்ந்த ரிஷிகேஷ், 23, தாம்பரத்தைச் சேர்ந்த ரகுமான், 24, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன், 38, உள்ளிட்டோர் தொடர் வழிப்பறி, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.அதேபோல், கஞ்சா விற்ற ரமா, 49, உட்பட 21 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்தாண்டில் இதுவரை, 244 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.மேலும் நன்னடத்தை விதிமீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 11 பேரையும், ஜாமினில் வெளிவர முடியாதபடி, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.