சென்னை :காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரியில் பயிலும் 11 மாணவர்களுக்கு, அமெரிக்க நிறுவனத்தில் ஆண்டுக்கு, 56 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில், எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது.இந்த மையத்தின் ஒன்றிணைந்த உடல்நலம் அறிவியல் துறையில், பேச்சு மொழிநடை நோயியலில் முதுகலை பட்டப் படிப்பு முடித்த மாணவ - மாணவியர், 11 பேர், அமெரிக்காவின் கலிபோர்னியா பிளேசடோன் பகுதியில் இயங்கி வரும் 'இடி தியரி' மருத்துவ நிறுவனத்தில், பேச்சு மொழிநடை நோயியல் நிபுணர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு ஆண்டுக்கு, 56 லட்சம் ரூபாய் சம்பளம்.இவர்களுக்கு, எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனரும், பெரம்பலுார் தொகுதி எம்.பி.,யுமான டி.ஆர்.பாரிவேந்தர், வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, சென்னையில் பாரிவேந்தர் நேற்று அளித்த பேட்டி:நாட்டில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், மாணவர்களுக்கு உலகத்தரத்தில் கல்வி வழங்குவதுடன் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக, தொழில் முனைவோர்களாக உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறது.அதோடு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தாண்டு, 12 ஆயிரம் மாணவர்களுக்கு, சர்வதேச முன்னணி நிறுவனங்களில், நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.அதில் ஒரு மாணவர், அமேசான் ஜெர்மனி நிறுவனத்தில், ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளத்தில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நம் நாட்டிற்கு, கல்வியில் ஆர்வமுள்ள பிரதமர் உள்ளார். அவர், தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளார். இதன் வாயிலாக, பல ஆயிரம் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளன.அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில், 400 ஆண்டுகள் பழமையான மருத்துவ கல்லுாரிகள், மருத்துவமனைகள் உள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில், 15 ஆண்டுகளே ஆன எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பது பெரிய சாதனை.அமெரிக்கா உட்பட, உலகில் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், எஸ்.ஆர்.எம்., முன்னாள் மாணவர்களைக் காண முடிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.