மறுபடியும் பிரச்னை!
கோவாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே மகதாயி பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கு.இது சம்பந்தமா மக்கள் பிரதிநிதிகள் அப்பப்போ பிரச்னை எழுப்புவாங்க. பின் அமைதியாயிடுவாங்க. எல்லா அரசியல் கட்சியும் தன்னோட தேர்தல் அறிக்கையில இந்த விஷயத்தை கண்டிப்பாக வாக்குறுதியா கொடுப்பாங்க.அதுபோல தாமரை கட்சியும் போன முறை தேர்தல் அறிக்கைல மகதாயி திட்டம் செயல்படுத்தப்படும்னு சொல்லி இருந்தது. ஆனா இன்னும் திட்டம் துவக்கப்படல. முதல்வரும் தேர்தலுக்குள் ஏதாவது செய்யனும்னு முனைப்போட இருக்காரு.இந்த நேரத்துல கோவாவுல இருக்கற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரு கர்நாடாக செய்து வரும் கலசா பண்டூரி திட்டத்தை பார்த்து, மகதாயி பணிகள்னு நெனச்சிருக்காரு. அதனால கர்நாடகா மகதாயி பணிகளை கர்நாடகா துவங்கிடுச்சி. இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு போய் தடுத்து நிறுத்தணுமுன்னு அம்மாநில அரசுக்கு கடிதம் எழுதி சொல்லி இருக்காரு. இதற்கு பதிலடி கொடுக்க கர்நாடகா தயாராகி வருகிறது.மர்மம் என்ன?அடுத்த ஆண்டு நடக்கற தேர்தலுக்காக 'லோட்டஸ்' கட்சிக்காரங்க வியூகங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாறிட்டு வருது. இந்த நேரத்துல டில்லி இருந்து உள்துறை அமைச்சரு சமீபத்துல வந்தாரு.இங்க இருக்கற நிர்வாகிகளுடன் பேசி, சில ஆலோசனைகளை கொடுத்திருக்காரு. சில நிர்வாகிகள் மாற்றப்படலாம்னு கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கு.இந்த நேரத்துல உள்துறை அமைச்சரு கர்நாடகா வரும் போது விமானத்துல தன்னோட கட்சியின் மாநில தலைவரை அழைச்சிட்டு வந்தாராம். அதுக்கு அப்புறம் அவர் திரும்பி போகும்போது தன்னுடன் விமானத்தில் அவரை அழைத்து சென்றாராம். இதன் மர்மம் என்னான்னு கட்சிக்காரங்க தலையை பிச்சிகிட்டு இருக்காங்களாம்.