பெங்களூரு-கர்நாடகாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் சைபர் கிரைம் குற்றவாளிகள் 254 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.மொபைல் போனுக்கு பரிசு விழுந்துள்ளது; வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும், கடன் வேண்டுமா என பல்வேறு விதங்களில் சைபர் கிரைம் குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிப்பது அதிகரிக்கிறது. அதிலும் கொரோனா காலக்கட்டத்தில், பல மடங்கு அதிகரித்துள்ளது.2019 முதல் 2022ல் மூன்று ஆண்டுகளில் மொத்தம் 22 ஆயிரத்து 286 வழக்குகள் பதிவாகி உள்ளது; 254 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது; இதுவரை 7,835 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 1,234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 75 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது; பறிமுதல் செய்யப்பட்டது 87 கோடி ரூபாய் மட்டுமே.மற்ற வழக்குகளில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை. வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து கொண்டு கைவரிசை காட்டுவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஒவ்வொரு வழக்கிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பல லட்சம் செலவழிக்க வேண்டி உள்ளதால் போலீசாரிடையே விசாரிக்க தயக்கம் உள்ளது.உதாரணத்துக்கு ஒருவர், மூன்று லட்சம் ரூபாயை இழந்தால் அதை மீட்க போலீசார் 15 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டி உள்ளது.ஊழியர் பற்றாக்குறை இருப்பதும் சிரமத்துக்கு ஒரு காரணமாக உள்ளது. தினமும் புது புது வழிகளில் சைபர் கிரைம் மோசடிகள் நடப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.