சென்னை :வேளச்சேரி நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக, நம் நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையிலான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, முதற்கட்டமாக, 110 கோடி மதிப்புள்ள, 3 ஏக்கர் இடம் மீட்கப்பட்டது.வேளச்சேரி - பெருங்குடி இடையேயான, 2.5 கி.மீ., ரயில்வே சாலையில், 150 அடி அகல நீர்வழிபாதை உள்ளது. வேளச்சேரி, தரமணி, கல்லுக்குட்டை, பெருங்குடி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் மழைநீர், இந்த நீர்வழி பாதை வழியாக சதுப்பு நிலத்தை அடையும்.நீர்வழி பாதையில் உள்ள இடத்தில், 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியதால், நீர்வழி பாதையில் மழைநீர் செல்வது தடைபடுகிறது.இது குறித்து, 2018ல், நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இச்செய்தி அடிப்படையில், உயர் நீதிமன்றம் விசாரித்தது. நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, அக்., 10ம் தேதி, வருவாய்த்துறை, 1.50 ஏக்கர் இடத்தை மீட்டது. அதில் இருந்த, 24 கட்டடங்கள் மட்டும் இடிக்கப்பட்டன. ஆனால், மொத்த ஆக்கிரமிப்பையும் மீட்டதாக நீதிமன்றத்தில் வருவாய் துறை கூறியது.மீண்டும், 'சீல்' அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்புகள் முளைத்தன. கடந்த 1ம் தேதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், '10 நாட்களுக்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவிட்டால், தலைமை செயலர் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும். சம்பந்தப்பட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக, அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர். இதையடுத்து, நேற்று, கிண்டி கோட்டாட்சியர் சாய்வர்தினி, சோழிங்கநல்லுார் தாசில்தார் அருண் தலைமையிலான அதிகாரிகள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.சோழிங்கநல்லுார் தாலுகா, 658 சர்வே எண்ணில் உள்ள, 3 ஏக்கர் ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 110 கோடி ரூபாய். ஆக்கிரமிப்பில் இருந்த, 10 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.இந்த பணியில், வருவாய் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த, 50 பேர் ஈடுபட்டனர். அடுத்து, வேளச்சேரி தாலுகா எல்லைக்கு உட்பட்ட ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வேண்டி உள்ளது.இந்த பணி ஓரிரு நாளில் துவங்கும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.