சென்னை:'முதல்வர் ஸ்டாலின், கடிதம் வாயிலாக வேண்டி கொண்டால் மட்டுமே போதை பொருட்களை ஒழித்து விட முடியாது; கடுமையான சட்டம் தேவை' என, தமிழக பா.ஜ., துணை தலைவர்வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஒத்துழைப்பு தேவை
அவரது அறிக்கை:முதல்வர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்களுக்கு எழுதிய கடிதம், நடிகர் வடிவேலுவின் சிரிப்பை காட்டிலும் அதிக நகைச்சுவை உடைய செய்தி. காரணம், ஒரு மாநில முதல்வர், அதுவும் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கிற துறை அமைச்சரான அவர், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து, காவல் துறைக்கு உத்தரவிடுவதற்கு பதில், எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுபோல், எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் எழுதிய முதல்வரை, இந்தியாவில் எங்காவது காண முடியுமா?நான்கு திசைகளில் உள்ள மாநிலங்களில் இருந்து லாரி, பஸ், ரயில் வாயிலாக போதை பொருட்கள் வருவது நமக்கு தெரிந்ததே! அதை தடுக்கவும், இதற்காக செயல்படும் ஏஜென்ட்களை கண்டறிந்து, கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், எம்.எல்.ஏ.,க்களின் ஒத்துழைப்பு தேவை என்று, முதல்வர் தெரிவிப்பதின் அர்த்தம் புரியவில்லை.
ஒழிக்க முடியாது
மாறாக, எம்.எல்.ஏ.,க்கள் இதில் ஈடுபட்டுள்ளனரா என, மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.கடிதம் வாயிலாக வேண்டிக் கொள்வதால், போதை பொருட்களை ஒழிக்க முடியாது. கடுமையான சட்டம் தேவை. அதை நிறைவேற்ற காவல் துறை உதவி தேவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.