ஊத்துக்கோட்டை:சிட்ரபாக்கத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ளது சிட்ரபாக்கம் கிராமம். இங்கு, ஆரணி ஆற்றின் நடுவே அமைக்கப்பட்ட சிட்ரபாக்கம் அணை உள்ளது.இப்பகுதியில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை. ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் கம்பங்களில் உள்ள கம்பிகள் மூலம், சிட்ரபாக்கம் பகுதிக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இப்பகுதியில், சில மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. குறிப்பாக, அணையை ஒட்டி உள்ள சாலையில் அமைத்த மின் மாற்றி கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.வரும் மாதங்களில் மழைக்காலம் துவங்க உள்ளது. அப்போது பலமாக காற்று அடிக்கும் நிலையில், சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றி கம்பம் விழும் நிலை உள்ளது.எனவே, மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிட்ரபாக்கம் கிராமத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின் மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.