வில்லியனுார்-மகா புஷ்கரணி விழாவை முன்னிட்டு ஒதியம்பட்டு காசிவிஸ்வநாதர் கோவில் சங்கராபரணி ஆற்றங்கரையில் படித்துறை அமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், காசியிலும் வீசம் பெற்ற கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முதல் முறையாக வரும் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மகா புஷ்கரணி விழா நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.விழாவின் ஒரு பகுதியாக 2023ம் ஆண்டு வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சங்கராபரணி ஆற்றில் கங்கா ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது.புஷ்கரணி விழாவிற்கு வரும் பக்தர்கள் புனித நீராடி செல்ல சங்கராபரணி ஆற்றில் திருக்காஞ்சி பகுதியில் படித்துறை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வந்து செல்வதற்காக கணுவாப்பேட்டை சாலையை, ஒதியம்பட்டு புதிய மேம்பால சாலையுடன் இணைப்பதற்கான இடத்தையும், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள சங்கராபரணி ஆற்றங்கரையில் படித்துறை அமைப்பதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் மணவாளன், உதவி பொறியாளர் கோபி, அமைச்சரின் தனிச்செயலர் மனோகரன், காசிவிஸ்வநாதர் கோவில் அறங்காவல் குழு தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.