கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில், சத்தரை -- கொண்டஞ்சேரி இடையே சேதமடைந்து உள்ள பாலத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட சத்தரை ஊராட்சி.இப்பகுதியில் சத்தரை கண்டிகை வழியாக, கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலையில் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது.இந்த பாலத்தை பயன்படுத்தி, கொண்டஞ்சேரி, மப்பேடு வழியாக சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், அரக்கோணம் சென்று வருகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர், சேதமடைந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்தனர்.இந்நிலையில், சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் அதன் உறுதித் தன்மையை இழந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''உயர் மட்ட பாலம் குறித்து, அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளதாகவும், உத்தரவு மற்றும் நீதி வந்தவுடன் பணிகள் துவங்கும்,'' என்றார்.