தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி : உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சியுடனும் பா.ஜ., கூட்டணி வைக்க விரும்பவில்லை. எங்களுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் வந்தால், தேர்தல் குழு கலந்தாலோசித்து முடிவு செய்யும். தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவை பா.ஜ., விரும்பவில்லை.
மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் அறிக்கை: விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கி, ஒரு வாரத்திற்கு மேலாகியும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணாத காரணத்தால், உற்பத்தி பாதித்துள்ளது. விசைத் தறி தொழிலாளர்கள், உரிமையாளர்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து, சுமுகமான தீர்வு காண, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு: விளையாட்டு வீரர்களிடம் இருந்து அரசியல்வாதிகள்
கற்றுக் கொள்ள வழி உள் ளது. போட்டி இருக்கலாம்; பொறாமை வளர்க்கக் கூடாது
என்பதே விளையாட்டுகள் மூலம் தெரிகிறது. இது, அரசியலில் இன்று தேவை.
கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி: இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், கள்ளை பதப்படுத்தி டப்பா, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது போல், தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுவை ஒழிக்கும் வரை, பனை, தென்னை பொருட்களை மூலப்பொருளாகக் கொண்டு, மது தயாரிக்க வேண்டும். "கள் போதைப் பொருள்' என கூறும் குமரிஅனந்தன், கள் இயக்கம் நடத்தும் வாத, விவாதத்தில் பங்கேற்று நிரூபிக்க வேண்டும்.
மத்திய உணவுத் துறை செயலர் குப்தா பேச்சு: சர்க்கரை உற்பத்தியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், தனியார் சர்க்கரை ஆலைகளும், ஈடுபட்டுள்ளன. இவை இரண்டுமே, அனைத்து விஷயங்களிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன. இவ்விரண்டு அமைப்புகளும் கூடிப் பேசி கருத்தொற்றுமைக்கு வருமானால், அரசு அதன்படி மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இந்திய பிசியோதெரபிஸ்ட் நலச் சங்க தலைவர் விஜய் ஆனந்த் அறிக்கை: பிசியோதெரபிஸ்ட்களை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியமர்த்துவதன் மூலம், குறைபாடு உள்ளதாக அறியப்பட்ட குழந்தைகளுக்கு, சிறந்த முறையில் சிகிச்சையளிக்க முடியும். மேலும், நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உடற்பயிற்சி மையங்களை அமைத்து, அவற்றில் பிசியோதெரபிஸ்ட்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கி, நோய்களை வருமுன் காக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE