தியாகதுருகம்-தியாகதுருகம் அருகே வனவர் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தாராமன், 46; ரிஷிவந்தியம் வனச்சரகத்தில் வனவராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 3 மாதங்களாக செம்பியன்மாதேவி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.இருப்பினும், வேலைக்குச் செல்லும் முன், வாழவந்தான்குப்பம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று பார்ப்பது வழக்கம். அதே போல் நேற்று காலை 6:00 மணியளவில் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 லட்சம் ரூபாய், 6 சவரன் செயின், 3 சவரன் நெக்லஸ், 4 சவரன் வளையல் என மொத்தம் 13 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., புகழேந்தி கணேசன் மற்றும் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை நடத்தினர். மேலும், விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் சைனா வரவழைக்கப்பட்டு தடயம் சேகரிக்கும் பணி நடந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.