கோவை:காலுறை, கையுறை அணியாமல், துாய்மை பணியாளர் ஒருவர் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி, கழிவுகளை அள்ளியதால், ஒப்பந்ததாரருக்கு, மாநகராட்சி, ரூ.5,000 அபராதம் விதித்தது.கோவை லங்கா கார்னர் பாலம் பகுதியில் சாக்கடை கால்வாய் மண்மேவி இருந்ததால், மழை நீர் செல்ல வழியின்றி, பாலத்தில் தேங்கியது. துாய்மை பணியாளர்களில் ஒருவர், கடந்த 4ம் தேதி, கையுறை, காலுறை அணியாமல், சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி, வெறும் கைகளால், கழிவு மண்ணை அள்ளினார். இப்புகைப்படம், மறுநாள் (5ம் தேதி) நமது நாளிதழில் வெளியிடப்பட்டது.அதைப்பார்த்து, சுகாதாரப் பிரிவினரை கடிந்து கொண்ட, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், ஒப்பந்த நிறுவனத்துக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்ததோடு, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினார்.அதில், 'இனி வரும் காலங்களில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி பணியாற்றக் கூடாதென கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. மீறினால், தங்களையே இச்செயலுக்கு பொறுப்பாக்குவதுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இக்கடிதம் பெற்ற, 48 மணி நேரத்துக்குள், அபராதத் தொகை ரூ.5,000 ஐ மாநகராட்சி கருவூலகத்தில் செலுத்தி, ரசீது நகலை, வார்டு பொறியியல் பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என கமிஷனர் கூறியுள்ளார்.