மேட்டுப்பாளையம்:மனை இடங்களை பிரித்து விற்பனை செய்வதற்கு, ஊராட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என, தடையின்மை சான்று வழங்கியதால், மருதூர் ஊராட்சிக்கு இழப்பீடு ஏற்பட்ட, 30.79 லட்சம் ரூபாயை, முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் செலுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதூர் ஊராட்சியின் முன்னாள் தலைவராக ரங்கராஜ் செயல்பட்டார். இவர் நிர்வாகம் செய்த காலத்தில், மனை இடங்கள் அங்கீகாரமற்ற மனை பிரிவுகளில், முறைகேடுகள் நடந்துள்ளதாக, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) பரமசிவம் ஆய்வில் கண்டறிந்துள்ளார். அவர், முன்னாள் ஊராட்சி தலைவருக்கு விடுத்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: மருதூர் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பரிசீலித்தது அடிப்படையில், மனை பிரிவுகளில் இருந்து, ஊராட்சிக்கு பெறப்பட வேண்டிய, 10 சதவீதம் பொது ஒதுக்கீடு பெறாமல், கையொப்பமிட்டு தடையின்மை சான்று வழங்கியது, ஊர்ஜிதம் ஆகிறது.
முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கராஜன், 'ஊராட்சியில் அங்கீகரிக்கப்படாத, 78 மனை பிரிவுகளில் உள்ள மனை இடங்களை, பிரித்து விற்பனை செய்வதற்கு, ஊராட்சிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை' என, மேட்டுப்பாளையம் சார் பதிவாளருக்கு, தடையின்மைச் சான்று வழங்கியுள்ளார். இதனால் ஊராட்சிக்கு, 30 லட்சத்து, 79 ஆயிரத்து, 18 ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய, போதிய கால அவகாசம் அளித்திருந்தும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமலும், இழப்புத் தொகையை திருப்பி செலுத்தாமலும் இருந்துள்ளார். எனவே இழப்பீட்டுத் தொகையை, தனியாரிடமிருந்து வசூலித்து, மருதூர் ஊராட்சி நிதிக்கு ஈடு செய்ய, தடை சான்று வழங்கி உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு கிடைத்த, 30 தினங்களுக்குள் ஊராட்சி நிதி கணக்கில், தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் காலக்கெடுவிற்கு மேல், 15 சதம் வட்டியுடன் வசூல் செய்யப்படும். காலக்கெடுவிற்குள் முன்னாள் தலைவர், இந்த உத்தரவு தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம்.இவ்வாறு, உத்தரவில் கூறியுள்ளார்.
இது குறித்து, மருதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ரங்கராஜ் கூறுகையில், ''அங்கீகாரமற்ற மனை பிரிவுகள் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. என் மீது குற்றம் சாட்டியுள்ள ஆவணங்களை, வழங்கும்படி நீதிபதியிடம் கேட்டிருந்தேன். நீதிபதியும் வழங்கும்படி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் உத்தரவு ஏதும் வழங்கவில்லை. ஆனால், வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மாவட்ட ஊரக வளர்ச்சி தணிக்கை உதவி இயக்குனர், 30.79 லட்சம் ரூபாயை, செலுத்தும்படி உத்தரவில் கூறியுள்ளார். இது குறித்து வக்கீலிடம், கலந்து பேசி ஆலோசனை செய்த பின்பு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.