விழுப்புரம்-சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், சிறிய ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோருக்கு 50 சதவீத மானியத்துடன் 2.5 கோடி ரூபாய் வரை நிதியுதவியையும் தமிழக அரசு வழங்குகிறது.இவ்வாறு அமையும் ஜவுளி பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற் கூடங்களுடன், 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.
நிலம், உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வு கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகங்கள், உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், இயந்திரம், தளவாடங்கள் இருக்க வேண்டும்.சிறிய ஜவுளி பூங்கா திட்ட மதிப்பீட்டில், நிலம், உட்கட்டமைப்பு, ஆய்வு கூடம் அமைக்கும் இனங்கள் 50 சதவீதம் அரசின் மானியம் பெற தகுதியான முதலீடாக கருதப்படும்.
இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மேலும் தகவல்களுக்கு மண்டல இணை இயக்குனர், துணி நுால் துறை, சங்ககிரி மெயின்ரோடு, குகை, சேலம் என்ற முகவரியில் அல்லது 0427-2913006 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.