சென்னை, கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதற்கு முன், புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு புதிய கட்டடங்களுக்கு திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்படுவதால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை புதுப்பேட்டை பகுதியில் கூவத்தை ஒட்டி, 10 மாடிகள் கொண்ட போலீஸ் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது.இதன்படி, கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் திட்ட அனுமதிக்கான கோப்பு சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வில் உள்ளது. திட்ட அனுமதி வழங்குவதில் சில பிரச்னைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த குடியிருப்பு வளாகத்துக்கு, ஆக., 8ம் தேதி திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், முதல்வர் இந்த கட்டடங்களை திறந்து வைக்கவும், நேரில் பார்வையிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. இதில் சில சிக்கல்கள் இருப்பதால், சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.இதனால், இத்திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ.,வின் அடுக்குமாடி திட்ட குழுவின் ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, புதிய குடியிருப்பின் சில பாகங்களுக்கு 'லிப்ட்' உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது.கட்டுமான பணிகளை முடித்துவிட்டு ஒப்புதல் பெறலாம் என, நகர், ஊரமைப்பு சட்டத்தில் அரசு கட்டடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை பயன்படுத்தி, புதிய குடியிருப்புகளை திறக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. காவலர் வீட்டுவசதி கழக அதிகாரிகளின் செயல்பாடு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.