உத்திரமேரூர்-உத்திரமேரூர் பேரூராட்சியில், தேசிய நகர்ப்புற வேலை திட்டத்தின் கீழ், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை திட்டத்தை போன்று, பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்த கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், மாவட்டத்திற்கு தலா ஒரு பேரூராட்சி என, 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்நிலைகள் மற்றும் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்துள்ளதாக உத்திரமேரூர் பேரூராட்சி தேர்வாகி, மார்ச் 16ம் தேதி முதல் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் நடக்கிறது. மழை நீர் வடிகால்வாய் சீர் செய்தல், குளங்கள் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இத்திட்டத்தில் மரக்கன்றுகள் நடவிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, பேரூராட்சி ஊழியர் ஒருவர் கூறியதாவது:உத்திரமேரூர் பேரூராட்சியில் ஏற்கனவே பல இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகிறோம். விரைவில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதையொட்டி, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களை கொண்டு தற்போது மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. காக்கநல்லுார், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில், புங்கன், பூசன், வேம்பு, நாவல், புளியமரம், அரசமரம் போன்ற நிழல் தரும் வகையிலான 600 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.