கூடுவாஞ்சேரி--நந்திவரம் - -கூடுவாஞ்சேரியில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 77ம் ஆண்டு ஆடி மாத தீமிதி திருவிழா 4ம் தேதி துவங்கியது.திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடந்தன.நேற்று முன்தினம், பெண் பக்தர்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்தனர். இரவு 7:00 மணிக்கு மேல், காப்பு கட்டிய பக்தர்கள் பக்தி பரவசத்தோடு பூக்குழியில் இறங்கி, தீ மிதித்தனர்.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா வந்தார். வாண வேடிக்கையுடன் அம்மன் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.சுற்று வட்டார கிராமங்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்று, அம்மனை தரிசித்து சென்றனர். இரவு 9:00 மணிக்கு, சத்யஜோதி நாடக சபா குழுவினரின் தெருக்கூத்து நாடகம் நடந்தது. அதேபோல், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கன்னியம்மன் கோவிலில், 35ம் ஆண்டு ஆடி திருவிழா நடந்தது.நேற்று முன்தினம், காலை 8:00 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 6:30 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து, வேண்டுதலை நிறைவேற்றினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் நந்திவரம் - கூடுவாஞ்சேரி மக்கள் ஏற்பாடு செய்தனர்.