உத்திரமேரூர்--'திருமுக்கூடல் மேம்பால சாலையில் செல்லும் லாரிகளில் இருந்து சிதறும் கற்துகள்களால், விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, லாரிகளில் தார்ப்பாய் போர்த்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.சாண்ட் மணல்
உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில், ஏராளமான கல் குவாரிகள், கிரஷர்கள், 'எம் சாண்ட்' தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, திருமுக்கூடல் மேம்பாலம் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, கல், மண், ஜல்லி மற்றும் எம் சாண்ட் மணல், லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
நடவடிக்கை
மேம்பாலத்தின் மீது தினமும் ஏராளமான லாரிகள் செல்வதால், சாலை மிகவும் பழுதடைந்து, ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது.இந்நிலையில், லாரிகளில் அதிக லோடு ஏற்றிச் செல்வதோடு, லோடு ஏற்றிச்செல்லும் லாரிகளில் தார்ப்பாய் போர்த்தாமல் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், மேம்பால சாலையில், கற்துகள்கள் கொட்டி ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.எனவே, திருமுக்கூடல் மேம்பாலத்தின் மீது குவிந்து கிடக்கும் கற்துகள்களை அகற்றுவதோடு, லோடு லாரிகளில் கட்டாயம் தார்ப்பாய் போர்த்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.