கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழகம், கர்நாடகா, கேரளா, டில்லி உட்பட ஏழு மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தடுப்பூசி, பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் 2019ல் துவங்கிய கொரோனா தொற்று, உலகம் முழுதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நம் நாட்டில் 2020 துவக்கத்தில் இந்த தொற்று பரவத் துவங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நம் நாட்டில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்து உள்ளனர்.
800 பேருக்கு பாதிப்பு
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, நாடு முழுதும் மக்களுக்கு செலுத்தப்பட்ட பின், கொரோனாவின் தீவிரம் குறையத் துவங்கி, தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஸ் பூஷண், டில்லி, தமிழகம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தாவது:இந்த மாநிலங்களில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. டில்லியில் சராசரியாக ஒரு நாளைக்கு 800 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.
கேரளாவில் கடந்த மாதத்தில் சராசரியாக தினமும், 2,347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
மஹாராஷ்டிராவில் 2,135 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற நான்கு மாநிலங்களிலும் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பூசி, பரிசோதனை, கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு நோய் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.
கூடுதல் கவனம்
மாவட்ட அளவில் குழு அமைத்து, பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
பரிசோதனை விபரங்களை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூட்டம் அதிகம் கூடும் பேருந்து நிலையம், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன், பள்ளிகள் ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.