தமிழக முதல்வரின் கோபம்
சமீபத்தில் லோக்சபாவில் நடந்த விவாதத்தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அதோடு 'ஆவின் பொருட்களை கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்யும் தமிழக அரசு, விலை உயர்விற்கு மத்திய அரசு காரணம் என சாக்கு சொல்கிறது' என குற்றம் சாட்டி தமிழில் பேசினார்.இதற்கு பதில் அளிக்க முடியாத தி.மு.க., - எம்.பி.,க்கள், காங்கிரசோடு சேர்ந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் தி.மு.க.,விற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகவும் கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு போன் செய்து, 'எதற்கு வெளிநடப்பு செய்தீர்கள்; அப்படியே வெளிநடப்பு செய்தாலும், அதற்கு முன்பாக நிதியமைச்சர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லிவிட்டு செய்திருக்க வேண்டும்' என கடுமையாக பேசியதாக சொல்லப்படுகிறது.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்ய எழுந்திருக்கையில், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.,யுமான பழனி மாணிக்கம், அவர்களை அமருங்கள் என தமிழில் சொல்கிறார். ஆனால், அவருடைய பேச்சைக் கேட்காமல் தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்கின்றனர். இது பார்லி., 'டிவி'யில் பதிவாகியுள்ளது.நிர்மலா சீதாராமன் இப்படி பேசுவார் என தி.மு.க., - எம்.பி.,க்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தான் வெளிநடப்பு செய்தனர் எனவும் சொல்லப்படுகிறது.லோக்சபாவில் தி.மு.க., தலைவராக இருக்கும் டி.ஆர்.பாலுவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்த அன்று அவர் சபைக்கு வரவில்லை. அவர் இருந்தால் நிச்சயம் ஏதாவது செய்திருப்பார் என்கின்றனர் சில தி.மு.க.,வினர்.இன்னொரு பக்கம், இது தி.மு.க., - எம்.பி.,க்கள் இரண்டு கோஷ்டிகளாக செயல்படுவதால் வந்த பிரச்னை என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள. ஒரு கோஷ்டி, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு தமிழகத்திற்கு அதிக வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறது. இன்னொரு கோஷ்டி மத்திய அரசை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்கிறதாம்.
மோடிக்கு குவிந்த கடிதங்கள்
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து, செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலை விழாவில் பங்கேற்று டில்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.பிரதமர் அலுவலகத்திற்கு, 8,000க்கும் மேற்பட்ட 'இ - மெயில்'கள் மற்றும் தபால் கார்டுகள் தமிழகத்திலிருந்து வந்துள்ளதாம். இவை அனைத்தும் தமிழில் உள்ளதாம்.'தமிழக மக்கள் என் மீது இவ்வளவு பாசமாக இருக்கின்றனரே' என மோடி சந்தோஷப்பட்டாராம். இந்த இ - மெயில் மற்றும் கடிதங்களில் உள்ள விபரங்கள் அனைத்தையும் படித்து தனக்கு ஒரு 'ரிப்போர்ட்' தர ஏற்பாடு செய்துள்ளாராம் மோடி.இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் உள்ளாராம். இந்தக் குழு அனைத்து கடிதங்களையும் படித்து அதில் உள்ள சாராம்சத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த உள்ளதாம்.சமீபத்திய சென்னை விசிட்டை அடுத்து, பிரதமர் மதுரைக்கு வர திட்டமிட்டுள்ளாராம். அடுத்த ஓரிரு மாதங்களில் அவர் மதுரைக்கு வருவார் என்கின்றனர், பிரதமர் அலுவலக அதிகாரிகள்.
டில்லியில் பழனிசாமி கோஷ்டி தீவிரம்
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை பிரச்னையால், அக்கட்சி இரண்டு பட்டு நிற்கிறது. பன்னீர்செல்வம் ஆட்களை பழனிசாமி நீக்க, பதிலுக்கு பழனிசாமி ஆட்களை பன்னீர் செல்வம் நீக்கி வருகிறார். இந்த மோதலால் அ.தி.மு.க.,வின் உண்மை தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர்.இதற்கிடையே 'லோக்சபா எம்.பி.,யாக உள்ள பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், அ.தி.மு.க., அணியில் இல்லை; அவரை தன்னிச்சையான எம்.பி.,யாக அறிவிக்க வேண்டும்' எனக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியிருந்தார் பழனிசாமி. ஆனால், இந்த கடிதத்தின் மீது இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.முன்னாள் துணை சபாநாயகரான தம்பிதுரை, பழனிசாமி கோஷ்டியில் இருக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் இவர், பார்லிமென்ட் விதிமுறைகளை நன்கு அறிந்தவர். இவர் பா.ஜ., தலைவர்களை சந்தித்து ரவீந்திரநாத் விவகாரத்தில், பழனிசாமிக்கு சாதகமான முடிவை எடுக்க வற்புறுத்தி வருகிறார். இதற்காக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை பல முறை சந்தித்து, 'ரவீந்திரநாத்தை தன்னிச்சையான எம்.பி.,யாக அறிவியுங்கள்' என வற்புறுத்தி வருகிறார். ஆனால், சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். ரவீந்திரநாத்தை தன்னிச்சையான எம்.பி., என சபாநாயகரால் அறிவித்தால், அவர் எந்த ஒரு கட்சியிலும் சேர முடியாது. அப்படி சேர்ந்தால், அவர் சட்டப்படி எம்.பி., பதவியை இழக்க நேரிடும். இதனால் தான் பழனிசாமி அவசரம் காட்டுகிறார் எனக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையில் மாற்றங்கள்
பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என பெருமை பெற்றுள்ள திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் சுத்த சைவம். ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிகளாக இருக்கும் போது, அவர்களுடைய மாநில 'டச்'சை ஜனாதிபதி மாளிகையில் காண முடியும். இப்போது அங்கே ஒடிசா மாநில டச்சை பார்க்க முடிகிறது. ஜனாதிபதி திரவுபதிக்காக முருங்கைக் கீரை பொறியல், உருளைக் கிழங்கு பர்த்தா என ஒடிசா உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது.உணவை போலவே தன் உடையிலும் ஒடிசா கலாசாரத்தைக் கடைப்பிடிக்கிறார் திரவுபதி. ஒடிசா பழங்குடியினர் அணியும் புடவைகளைத் தான் அவர் அணிகிறார். இவர் ஒடிசா அமைச்சராகவும், ஜார்க்கண்ட் கவர்னராகவும் இருந்த போது தன்னுடன் பணியாற்றியவர்களையே ஜனாதிபதி மாளிகையிலும் தனக்கு உதவியாளர்களாக நியமித்துள்ளார். இவர் ஒடிசா அமைச்சராக இருந்த போது, பிஜய் பட்நாயக் என்பவர் இவருக்கு உதவியாளராக இருந்தார். இப்போது இவர் ஜனாதிபதியின் கூடுதல் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிக்கலில் சோனியா, ராகுல்
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை காங்., தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் இயக்குனர்களாக இருக்கும் 'யங் இந்தியன்' நிறுவனம் வாங்கிய வழக்கில், அமலாக்கத் துறை அவர்களை விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக சோனியா, ராகுல் மற்றும் சில காங்., தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சமீபத்தில், காங்., சீனியர் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லியுள்ளாராம். இந்த பதில்கள் சோனியா, ராகுல் சொன்னதுடன் ஒத்துப் போகவில்லையாம். இதனால், ராகுல், சோனியா மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாம்.வரும் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்த மோடி முயற்சித்து வருகிறார் என, காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். நேஷனல் ஹெரால்டிற்கு சொந்தமான பல கட்டடங்கள், பல மாநிலங்களில் உள்ளன. இவற்றிலிருந்து மாதம் ஒன்றுக்கு 40 கோடி ரூபாய் அளவுக்கு வாடகையாக வருகிறதாம். 'இந்த வருமானத்தை பா.ஜ., தடுக்கப் பார்க்கிறது; விரைவில் இந்த சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்படலாம்' என காங்., தலைவர்கள் கூறுகின்றனர்.'இந்த தகவல் உண்மை தான்; விரைவில் இந்த சொத்துக்கள் முடக்கப்படும்' என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.