சென்னை:சாலை ஓரத்தில் வசிக்கும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் ஆய்வாளர் ராஜரத்தினம், 76, தனக்கு வர வேண்டிய பணப் பயன்களை வழங்க, கூட்டுறவு துறைக்கு உத்தரவிடுமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளராக பணிபுரிந்த ராஜரத்தினம் என்பவர், பல ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு வேளை சாப்பிட கூட வழியின்றி சிரமப்படுகிறார்.
ஸ்டாலினுக்கு கோரிக்கைசென்னை கலங்கரைவிளக்கத்தின் பின்புறத்தில் உள்ள சாலை ஓரத்தில் வசிக்கும் ராஜரத்தினம், தனக்கு வர வேண்டிய பணப் பயன்களை விரைந்து வழங்க, கூட்டுறவு துறைக்கு உத்தரவிடுமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, ராஜரத்தினம் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளராக, 1969ல் பணியில் சேர்ந்தேன்.அயல் பணியில், சென்னை துறைமுக பணியாளர் கூட்டுறவு சங்க தனி அலுவலராக, 1988ல் பணியில் நியமிக்கப்பட்டேன். அங்கே நான் பணியாற்றுவதை விரும்பாத சில ஊழியர்கள் கூட்டுச் சதியில் ஈடுபட்டதால், 1.25 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கண்டறிந்து, அதே ஆண்டில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டேன்.
என் மீது வழக்கு தொடரப்பட்டது. துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், 12 ஆண்டுகள் நடந்த வழக்கில் விசாரணை முடிந்து, 2011ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.வழக்கில் இருந்து என்னை விடுவித்து, நிரபராதி என தீர்ப்புஅளிக்கப்பட்டது.இந்த இடைப்பட்ட காலத்தில், பணிமூப்பின் அடிப்படையில் ஓய்வுபெறும் வயதாகி விட்டது. துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, 34 ஆண்டுகள் ஆகி விட்டதால், அனைத்து பதவி உயர்வுகளையும், நிதி பயன்களையும் இழந்துள்ளேன்.நிரபராதி என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று, என் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டியும், சம்பளம் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்குமாறும், கூட்டுறவு துறையின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு விண்ணப்பித்தேன்.
ஆதரவின்றி வசிக்கிறேன்
பல ஆண்டுகளாகியும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால், சமூக அந்தஸ்து மற்றும் குடும்ப வாழ்க்கையை இழந்து, சென்னை கலங்கரை விளக்கத்தின் பின்புறம் ஆதரவின்றி சாலையில் வசித்து வருகிறேன்.சமீபத்தில் நடந்த ஒரு கார் விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால், மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறேன். எனக்கு வழங்க வேண்டிய நிதி பயன்கள் விரைந்து கிடைக்க, கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.