சென்னை: ''சமூக நீதி சமுதாயம் உருவாக, மனித உரிமைகள் ஆணையம் உதவ வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளி விழா, சென்னை கலைவாணர் அரங்கில், நடந்தது. வெள்ளி விழா மலரை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பெற்றுக் கொண்டார்.விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மனித உரிமைகளும், மனித மாண்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், நாங்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். தனி மனிதனின் உரிமைகள், எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது; பறிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில், உறுதியாக இருக்கிறோம். அதை தான் அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது.
அதை காக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்து அரசுகளுக்கும் உள்ளது. அந்த கடமையில் இருந்து நாங்கள் ஒருநாளும் தவற மாட்டோம்.நீதித் துறையின் கோரிக்கைகளை, தி.மு.க., அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. மாநில மனித உரிமை ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
ஆணையத்தின் விசாரணை குழுவில், காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மனித உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்கள், விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக போராடி வருபவர்களையும், இதில் பயன்படுத்தி கொள்வது குறித்து ஆராயப்படும். ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும்.
மனித உரிமை தகவல்கள் அனைத்தும், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். மனித உரிமைகள் குறித்த பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.எந்த தனிமனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகமும், எதன் பொருட்டும் இழிவுபடுத்தப்பட கூடாது. இதற்குக் காரணமான யாரும், சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பி விடக் கூடாது. இவை மூன்றும் தான், தி.மு.க., அரசின் மனித உரிமைக் கொள்கை.
எல்லாருக்கும் எல்லாம் என்ற சமூக நீதி தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை, நாங்கள் நடத்தி வருகிறோம். மக்களுக்கு இன்றைய தேவை, நீதி மட்டும் தான் என்பதை நாங்கள் அறிவோம். இத்தகைய சமூக நீதி சமூகத்தை உருவாக்க, மாநில மனித உரிமை ஆணையம் அனைத்து வகை யிலும் உதவ வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.
எஸ்.பி.,க்களுக்கு விருது
திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன், கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோருக்கு, சிறந்த செயல்பாடுகளுக்கான விருதுகளை, முதல்வர் வழங்கினார்.
வெள்ளி விழாவை முன்னிட்டு, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, ஆணையம் நடத்திய தமிழ், ஆங்கில கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது:அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்குவது தான் மனித உரிமை. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புகளில், பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும். தற்போது நீதித் துறையில் அதிகமான பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது நல்ல முன்னேற்றம். மனித உரிமைகளை காக்கும் சமுதாயம் தான் சிறந்த சமுதாயம்.இவ்வாறு அவர் பேசினார்.
விழிப்புணர்வு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி பேசியதாவது:மனிதநேயம் தான் மனித உரிமை. மனித உரிமைகளை பாதுகாப்பதில், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், மனித உரிமை ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பது, மனித உரிமையின் அடிப்படை.இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா பேசியதாவது: ஐந்தாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்தியா, உலகமே குடும்பம் என்று அனைவரையும் சமமாக கருதுகிறது. தற்போதைய உலகமயமாக்கல் சூழலில், மனித உரிமைகளை பாதுகாப்பதில், மனித உரிமைகள் ஆணையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமூக, பொருளாதார ரீதியாக சம நிலை ஏற்பட வேண்டும்.
அப்போதுதான் ஒவ்வொரு மனிதனின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினர்.சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தமிழக தலைமைச் செயலர் இறையன்பு, மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன், உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் மோகன்தாஸ், செயலர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.