சிவகங்கை : அரசு, உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு அக்.,1 ல் தமிழ்மொழி இலக்கிய திறன் தேர்வு நடத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்துஉள்ளது. பள்ளி மாணவர்கள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுக்கு தயாராகி பங்கு பெறுகின்றனர்.
அதேபோன்று தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் வரும் கல்வி ஆண்டு (2022--2023) முதல் தமிழ் மொழியில் இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும்,மீதமுள்ள 50 சதவீதம் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.பத்தாம் வகுப்பு தரத்திற்கான தமிழ் பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறிவகை வினாக்கள் தேர்வில்இடம் பெறும். அந்தந்த மாவட்ட தலைநகரில் தமிழ்மொழி இலக்கிய திறனறிதல் தேர்வு நடக்கும். தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் (சி.பி.எஸ்.இ., மற்றும்ஐ.சி.எஸ்.இ.,) பிளஸ் 1மாணவர்கள் அக்., 1 அன்று நடக்க உள்ள திறனறிதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த பள்ளிகள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை www.dge.tn.gov.in'' இணையதளம் மூலம் ஆக., 22 முதல் செப்.,9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.50 சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்களிடம்ஒப்படைக்க வேண்டும். செப்., 9 கடைசிநாள்.