மானாமதுரை : வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மானாமதுரை வந்ததை தொடர்ந்து கால்வாய்களில்தண்ணீர் செல்வதால் விவசாயிகள் விவசாய பணிகளை துவக்கி உள்ளனர்.வைகை அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதையடுத்து 3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லும் வைகை ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என்றும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல கூடாது என்றும், வைகை ஆற்றின்கரைகளை கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மானாமதுரை நகராட்சி சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் மானாமதுரை பகுதியை நேற்று வந்தடைந்ததை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை அருகே உள்ள விரகனூர் மதகு அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பகுதிக்கு 2800 கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மானாமதுரை வந்தடைந்ததை தொடர்ந்து மானாமதுரை பகுதியிலுள்ள கிராம கண்மாய்களுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மேலும் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து இடது பிரதான கால்வாய் மூலம் இளையான்குடி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
மானாமதுரை, இளையான்குடி பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் ஆடி மாதமே வைகையில் தண்ணீர் வந்ததை தொடர்ந்து கால்வாய் மூலம் தற்போது கண்மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால்விவசாய பணிகளை ஆர்வமுடன் துவக்கி உள்ளோம் என்றனர்.