சென்னை:நாகை மாவட்டத்தில், சட்டவிரோத மணல் குவாரி நடத்துவதாக கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம், பெரும்கடம்பனுார், இளம்கடம்பனுார், சிரங்குடிபுலியூர் கிராமங்களில், சட்டவிரோதமாக மணல் குவாரி நடப்பதாகவும், நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், சிலம்பரசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, ''நிபந்தனைகள் அடிப்படையில், குவாரிக்கான குத்தகை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குவாரி எதுவும் நடக்கவில்லை. வழக்கு தொடர்ந்தவர், சட்டவிரோத குவாரியில் ஈடுபட்டதாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குத்தகைதாரர்களை மிரட்டுவதற்காக, வழக்கு தொடரப்பட்டுள்ளது,'' என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'குவாரி குத்தகை வழங்கப்பட்டது தெரியாது; மனுதாரருக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் எல்லாம் பொய்யானவை' என, தெரிவிக்கப் பட்டது.இரு தரப்பு வாதங்களுக்கு பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:வழக்கு தொடுப்பதற்கு முன், உண்மை நிலவரங்களை அறிய வேண்டிய பொறுப்பு, மனுதாரருக்கு உள்ளது. சட்டப்படி, குவாரி குத்தகை வழங்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு எதிராக, வழக்கும் உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை, 15 நாட்களுக்குள் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும். செலுத்தப்பட்டதை, உயர் நீதிமன்ற பதிவாளர் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.