திருப்பூர்:ஹிந்து சமய அறநிலையத் துறையின் இலவச திருமண திட்டத்தின் கீழ், 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த, 1 கோடி ரூபாய் செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுமென, தமிழக அரசு அறிவித்துள்ளது. மண்டலத்துக்கு, 25 திருமணங்கள் வீதம், 20 மண்டலங்களில், 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
'கிரேடு - ஏ', 'கிரேடு -1' கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, இலவச திருமணம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.அதிகாரிகள் கூறியதாவது:இலவச திருமணம் செய்யும் மணமகளுக்கு, 18 வயதும், மணமகனுக்கு, 21 வயதும் பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதற்கான ஆதார சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். முதல் திருமணம் என்பதற்கான வருவாய்த்துறை சான்றும் அவசியம்.பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், இத்திட்டம் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும். சட்டவிதிகள் அடிப்படையில் திருமண ஜோடிகள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வாகும் ஜோடிகளுக்கு திருமண கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். திருமணத்துக்கான முழு ஏற்பாடுகளை செய்ய ஒரு ஜோடிக்கு, 20 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப் பட்டுஉள்ளது. திருமாங்கல்யம், மாலைகள் உட்பட திருமண செலவுகள் கோவில் நிதியில் இருந்து செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும், 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த, 1 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.