திருப்பூர்:மானிய விலை ரேஷன் பொருள் வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில், கார்டுதாரர்களின் பொருளாதார நிலை குறித்து சீராய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பொது வினியோக திட்டத்தில், பொதுமக்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, மானிய விலையில் உணவு பொருள் வினியோகம் செய்யப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில், 'தகுதியான நபர்கள் யாரும் விடுபடக்கூடாது; வசதி படைத்தவருக்கு மானிய விலை ரேஷன் பொருள் கிடைக்க கூடாது' என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில், மாவட்டம் தோறும் ரேஷன் பொருள் பெறுவோரின் பொருளாதார நிலையை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது. ஏழைகளுக்கு, அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில், ரேஷன் பொருட்கள் கூடுதல் மானிய விலையில் கிடைக்கிறது; எவ்வளவு குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும், தலா, 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.அந்தியோதயா அன்னயோஜனா (ஏ.ஏ.ஒய்.,)திட்டத்தில், கூடுதல் மானியம் ஒதுக்கப்படுவதால், பயனாளிகளின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏ.ஏ.ஒய்., கார்டுதாரர்களின் பொருளாதார நிலை சரிபார்ப்பு நடந்து வருகிறது.வசதிபடைத்தவர்கள், ரேஷன் பொருள் வாங்குவதை தவிர்க்க, எந்த பொருளும் பெறாத, 'என்' கார்டுகளும் வழங்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், அரிசி கார்டு - 7.43 லட்சம், ஏ.ஏ.ஒய்., - 36,620, சர்க்கரை கார்டு - 17,082, போலீஸ் கார்டு - 1,069, 'என்' கார்டு - 1,613, முதியோர் உதவி பெறும் ரேஷன் கார்டு -11,325, அன்னபூர்ணா திட்ட ரேஷன் கார்டு -101 என, மாவட்டத்தில், 7.80 லட்சம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.மாவட்டம் வாரியாக, ஆய்வு நடத்தி வரும், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொதுவினியோக திட்ட மேம்பாட்டுக்கான, ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன்படி, 'தகுதியானவர் விடுபடக்கூடாது; வசதிபடைத்தவர் பயன்பெறக்கூடாது' என, மாவட்டம் தோறும் உத்தரவிடப்பட்டுள்ளது.குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:நடுத்தர மக்கள், முன்னுரிமையற்ற கார்டுகளை வைத்துள்ளனர்; சற்று வசதி படைத்தவர்கள், சர்க்கரை கார்டுகள் வைத்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு மேல் வசிக்கும், வி.ஐ.பி.,கள், 'என்' கார்டுகள் வைத்துள்ளனர். 'என்' கார்டுகள், முகவரி சான்றுக்கு மட்டுமே, எந்த பொருளும் வழங்குவதில்லை.அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில், வசதியான குடும்பங்களும், மத்திய அரசின் சலுகைகள் பெறுவதாக புகார் இருந்தது.
அதன்படி, தாலுகா வாரியாக, ஏ.ஏ.ஓய்., கார்டுதாரர் விவரம் சரிபார்க்கப்படுகிறது. கடை வாரியாக விவரங்களை பெற்று, வசதி படைத்த கார்டுகள், முன்னுரிமையற்ற கார்டுகளாக மாற்றப்படும்.கடைகள் வாரியாக, அதற்கான முன்னேற்பாடு துவங்கியுள்ளது. ஏ.ஏ.ஒய்., கார்டு வைத்துள்ள குடும்பங்களில், பெண்கள் மட்டுமே தலைவராக இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள், தாங்களாக முன்வந்து, ரேஷன் கார்டுகளை, 'என்' கார்டாக மாற்றிக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.