திருப்பூர்:மனதை பாதிக்கும் வகையில், மனம் மற்றும் உடல் ரீதியாக எந்தவித தண்டனையும் மாணவர்களுக்கு வழங்கக்கூடாது' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் சமீபத்தில் மண்டல ஆய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் அலு வலக கூட்டரங்கிலும், பல்லடம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியிலும் அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் தலைமையில் நடந்தது.இதன் அடிப்படையில் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி வழங்கியுள்ள வழிகாட்டுதல்:பள்ளியில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். உதாரணமாக மாணவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது, ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, உணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் என்ன நடந்தாலும் உடனடியாக சி.இ.ஓ., விடம் தெரிவிக்க வேண்டும்.மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது. கருவூல பணிகளுக்கு ஆசிரியர்களை அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.ஆசிரியரல்லா பணியாளர்கள் எவருமே இல்லாத சூழலில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. அலுவலக பணிக்கு இளநிலை உதவியாளர் இருக்கும் போது ஆசிரியர்கள் செல்லக்கூடாது.வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ, இதர காரணத்தினாலோ வெளியில், மரத்தடியில் வகுப்பு நடத்தக்கூடாது. மாணவர்களுக்கு வழங்கும் சத்துணவினை தலைமை ஆசிரியர் அல்லது சிறப்பாசிரியர் நேரில் ஆய்வு செய்து தரமான உணவை வழங்க வேண்டும்.பள்ளியில் பயிலும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.