திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நேற்று பொது மருத்துவ முகாம் நடந்தது.மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உடன் இணைந்து மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருப்பூர் மெல்வின் ஜோஸ் லயன்ஸ் கிளப், லோட்டஸ் கண் மருத்துவமனை, ரேவதி மருத்துவமனை, ஸ்ரீசாய் சகாலயம், ஆதவ் பல் மருத்துவமனை ஆகியன இணைந்து இம்முகாமை நடத்தின. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி வரவேற்றார்.குடும்ப நல கோர்ட் நீதிபதி சுகந்தி தலைமை வகித்து முகாமைத் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:இந்த உடல் என்பது இறைவன் நமக்கு அளித்த மிகப் பெரிய கொடை. அதை முறையாகப் பராமரித்து பாதுகாத்து நல்ல உடல் நலத்துடன் வாழ்வதும், அதை பாழ்படுத்தி வீணடிப்பதும் நம் கையில் தான் உள்ளது. இந்த பூமியில் நம் பிறப்பு மூலம் குடும்பத்தாருக்கும், உலக மக்களுக்கும் உதவும் வகையில் நாம் நம் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும்.நம்மை நம்பியுள்ள நம் குடும்பத்தைக் காப்பாற்ற நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும். எனவே அதை முறையாக நாம் பாதுகாத்து நலமுடன் இருக்க வேண்டும்.வேலைப் பளு காரணமாக மருத்துவ பரிசோதனைக்கும், உடல் நலம் காக்கவும் இயலாத நிலையில் உள்ளோருக்கு இது போன்ற மருத்துவ முகாம்கள் பயன்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.முகாமில், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.இதில் மகிளா கோர்ட் நீதிபதி நாகராஜன், மோட்டார் விபத்து வழக்கு சிறப்பு கோர்ட் நீதிபதி ஸ்ரீகுமார், தலைமை குற்றவியல் நடுவர் புகழேந்தி, வக்கீல் சங்க நிர்வாகிகள், பழனிசாமி, சுப்ரமணியம், அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.