கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக, வீண் வதந்தி, சொந்த கருத்துகளை பரப்பும், 'யுடியூப்' சேனல்களுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் பள்ளி மாணவி இறந்த வழக்கின் விசாரணையை, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கோணங்களிலும், நியாயமான, விரிவான புலன் விசாரணை நடந்து வருகிறது.இதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. சமூக ஊடகங்கள், பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்கள் இது தொடர்பாக சொந்த கருத்துகளையும், அறிக்கைகளையும் காணொலி காட்சி வாயிலாக வெளியிடுகின்றனர்.
மேலும், புலன் விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இது, சி.பி.சி.ஐ.டி., புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளது.விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையிலான பதிவு, காணொலி காட்சியை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம். தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான புலன் விசாரணையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அவர்களுடைய வலைதள கணக்குகள், யுடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பாக யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதை, 90038 48126 என்ற எண்ணுக்கு நேரடியாக பகிரலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.