கூடலுார்:பெரியாறு அணை உறுதித் தன்மைக்கு எதிராக, கேரளாவைச் சேர்ந்த ஒருவர், 'ஆல்பம்' பாடலை தயாரித்து, பீதியைக் கிளப்பும் வகையில் 'வீடியோ' வெளியிட்டதற்கு, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர் மீது நடவடிக்கை கோரி, இன்று தேனி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் விவசாயிகள் புகார் அளிக்க உள்ளனர்.'
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், ஐந்து ஆண்டுகள், 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு அணையின் பலம் உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும் அணைப்பகுதியில் கன மழை பெய்து நீர்மட்டம் உயரும்போது மட்டும், கேரளாவில் அணை உடைந்து விடும் எனவும், புதிய அணை கட்ட வேண்டும் எனவும் பிரச்னையை பெரிதுபடுத்தி வருகின்றனர்.
அணை உடைவது போன்ற, 'கிராபிக்' காட்சிகளை வலைதளங்களில், 2018ல் வெளியிட்டு கேரள மக்களை அச்சுறுத்தினர். இந்நிலையில், ஒரு வாரமாக அணையின் உறுதித்தன்மைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஒருவர் ஆல்பம் பாடல் தயாரித்து பரப்பி வருகிறார்.அணை உடைந்து கேரளா தண்ணீரில் மூழ்குவது போன்ற கிராபிக் காட்சியையும் இப்பாடலில் இடம் பெறச் செய்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக உலா வரும் பிரச்னைக்குரிய இந்த வீடியோவை தடுக்க, கேரள அரசு முன்வரவில்லை.அதனால், இந்த வீடியோவை தயாரித்தவரை உடனடியாக கைது செய்யக்கோரி, தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று ஐந்து மாவட்ட விவசாயிகள் புகார் அளிக்க உள்ளனர்.