மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே குண்டளை புதுக்கடியில் நேற்று நள்ளிரவு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மூன்று கடைகள், கோயில், இரண்டு ஆட்டோக்கள் சேதமடைந்தன. உயிர்பலி தவிர்க்கப்பட்டது.
மூணாறு - வட்டவடை ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் குண்டளை புதுக்கடி டிவிஷன் உள்ளது. அங்கு நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு ஒன்றரை கி.மீ. தொலைவில் மலை மீது ஏற்பட்ட கடும் நிலச் சரிவில் பாறைகள், மரங்கள் அடித்து வரப்பட்டன. அவை ரோட்டோரம் இருந்த குடிநீர் தொட்டி, விநாயகர் கோயில், மாரியப்பன், அன்புராஜ், பழனி ஆகியோரின் கடைகளை அடித்துச் சென்றன. இரண்டு ஆட்டோக்கள் மண்ணுக்குள் புதைந்தன.
தவிர்ப்பு
சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன் அந்த வழியில் வட்டவடைக்கு ஜீப்பில் சென்றவர் காட்டாற்று வெள்ளம் வருவதை பார்த்து ஏதோ விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்து எஸ்டேட் வாச்சருக்கு தகவல் அளித்தார்.அவர் எஸ்டேட் அதிகாரி சைமனுக்கு தகவல் அளித்ததால் புதுக்கடியில் வசித்த தொழிலாளர்கள் 142 குடும்பங்களைச் சேர்ந்த 450 க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர்.
அருகில் உள்ள சான்டோஸ் காலனி, எல்லப்பட்டு, சிட்டி வாரை ஆகிய எஸ்டேட்டுகளில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். எஞ்சியவர்கள் குண்டளை துவக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவு சற்று தடம் மாறியதாலும், உருண்டு வந்த மெகா பாறை ஒன்று மரங்கள், கற்கள், சேறு, சகதி ஆகியவற்றை தடுத்து நின்றதாலும் குடியிருப்புகள் தப்பின.
பாறைகள் உருண்டு வந்ததில் 50 மீட்டர் துாரம் ரோடு சேதமடைந்ததால் குண்டளைக்கு அடுத்து உள்ள செண்டுவாரை, எல்லப்பட்டி ஆகிய எஸ்டேட்டுகளும், டாப் ஸ்டேஷன், வட்டவடை ஊராட்சியில் அனைத்து பகுதிகள் துண்டிக்கப்பட்டன. மூணாறு போலீசார், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.