மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணை இன்று (ஆக., 7) திறக்கப்படுகிறது.
கேரளாவில் மிகப்பெரிய இடுக்கி அணை (உயரம் 554 அடி) வரலாற்று சிறப்புமிக்கது. இடுக்கி, செருதோணி அணைகள் அருகருகே கட்டப்பட்டு தண்ணீர் ஒன்றாக தேங்கும் என்பதால் நிரம்பும் போது கடல் போல பிரமிப்பை ஏற்படுத்தும்.
இடுக்கி அணை 'ஆர்ச்' வடிவிலும், செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளதால் செருதோணி அணையில் மட்டும் ஷட்டர்கள் உள்ளன.இடுக்கி அணை நீர்பிடிப்பு பகுதியில் ஒரு வாரமாக பெய்யும் மழையால் நீர்மட்டம் உயர்ந்தது. முல்லை பெரியாறு அணை நேற்று முன் தினம் திறக்கப்பட்டு பெரியாறு ஆறு வழியாக தண்ணீர் இந்த அணைக்கு வந்ததால் நீர்மட்டம் மேலும் அதிகரித்தது.
அதனால் ரூல் கர்வ் விதிமுறைபடி நேற்று காலை 7:30 மணிக்கு நீர்மட்டம் 424.19 அடியாக இருந்தபோது 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது.அணையை திறப்பது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் ஆலோசனை நடந்தது. அதில் இன்று காலை செருதோணி அணையில் ஒரு ஷட்டரை 70 செ.மீ., உயர்த்தி 50 கன அடி தண்ணீர் திறந்து விட முடிவானது.
பெரியாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்த 79 குடும்பத்தினரை நிவாரண முகாம்களில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.இடுக்கி அணை 1973 முதல் பயன்பாட்டிற்கு வந்த பிறகு 1981ல் அணை முதன்முதலாக திறக்கப்பட்டது. பின் 1992, 2018ல் அணை திறக்கப்பட்டது.