ஊட்டி:'நெகிழி இல்லா நீலகிரி'யை உருவாக்கும் விதமாக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கப்படுகிறது.தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 'நெகிழி இல்லா நீலகிரி' என்ற தலைப்பில் மாபெரும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்று, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மஞ்சப்பையை, உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வழங்கினார்.நிகழ்ச்சியையொட்டி, பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மாணவியர், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் சார்பில் மஞ்சப்பை குறித்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார், கலெக்டர் அம்ரித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.