திருப்பூர்:'சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகளுடன், கம்யூ., தலைவர் ஜீவா சந்திப்பு நிகழ்ந்த சிராவயலில் நினைவு மண்டபம் கட்டப்படும்,' என, முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக தெரிவித்தார்.இ.கம்யூ., கட்சியின், 25வது மாநில மாநாடு திருப்பூரில் நேற்று துவங்கியது. இதில் காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வேறு பெயர்களிலான இயக்கங்களாக இருந்தாலும் கொள்கையால் ஒன்றிணைந்துள்ளோம். இது தேர்தல் கூட்டணி அல்ல. தேர்தல் கூட்டணி என்றால் தேர்தலுடன் முடிந்திருக்கும்; ஆனால், இது கொள்கை கூட்டணி. சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள், ஜீவாவுடன் சந்தித்து பேசிய சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில், அச்சந்திப்பு நினைவாக மணிமண்டபம், தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும்.இந்தியா ஒற்றுமையாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. அதை சிதைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவும், சமூக நல்லிணக்கம் மற்றும் மாநில உரிமைகள் மீட்கவும் இந்த மாநாடு வலியுறுத்தும். அனைத்து மதத்தினர் வழிபாட்டு உரிமையும் உரிய வகையில் வழங்கப்படும். சுதந்திர தினம் உணர்வுடன் கொண்டாடப்பட வேண்டும். ஒற்றுமை, சமத்துவம், அன்பு, இணக்கம், சகோதரத்துவம் ஆகியன பின்பற்ற வேண்டும். இந்த முதல்வர் பதவி எனக்கு தானாக வரவில்லை. கூட்டணி கட்சிகளின் உழைப்பால் கிடைத்தது. கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை மட்டும் வளர்ச்சியல்ல. அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாணயத்துக்கு இருபுறம் உள்ளது போல், வளர்ச்சியும், சமூக மேம்பாடும் ஒருங்கே அமைய வேண்டும்.மதவாதம், ஜாதியவாதம், சனாதனம், வர்ண பேதத்துக்கு எதிரானது திராவிடம். திராவிட மாடல் என பெயர் வைத்துள்ளோம். தமிழ்நாடு மாடல் என ஏன் வைக்கவில்லை என்கின்றனர். தமிழ்நாடு என்பது ஒரு இடத்தை குறிக்கும். கொள்கை, கோட்பாட்டை குறிப்பது திராவிடம்.இவ்வாறு அவர் பேசினார்.