பாட்னா-சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஆர்.சி.பி.சிங்கிடம், அக்கட்சி விளக்கம் கேட்டுள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மீண்டும் ஆட்சி
சமீப காலமாக இரு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதனால், நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவார் என கூறப்படுகிறது.அவர் பல்வேறு விஷயங்களில் பா.ஜ.,வுக்கு, தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார். இதில் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தேசியத் தலைவர் ஆர்.சி.பி.சிங்கும் சிக்கியுள்ளார்.மத்தியில், 2019ல் பா.ஜ., தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தபோது, ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒரு அமைச்சர் பதவி தரப்பட்டது. இதற்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையும் மீறி, மத்திய அமைச்சராக ஆர்.சி.பி. சிங் பதவியேற்றார்.இதைத் தொடர்ந்து அவருக்கும், நிதிஷ்குமாருக்கும், இடையேயான உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சமீபத்தில் அவருடைய ராஜ்யசபா எம்.பி., பதவி முடிவுக்கு வந்தது. ஆனால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை.இதையடுத்து, அவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.மேலும் பாட்னாவில் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவையும் கட்சி திரும்பப் பெற்றது.
முறைகேடு
இதையடுத்து, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிங், நாளந்தாவில் உள்ள தன் கிராமத்துக்கு திரும்பினார்.இந்நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் அவர் வாங்கிய சொத்துக்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக பதிலளிக்கும்படியும், கட்சியின் சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.ஆனால், இந்தப் புகாரை சிங் மறுத்துஉள்ளார். வருமான வரி செலுத்தும் தன் மனைவி மற்றும் மகள் பெயரில் அந்த சொத்துக்கள் உள்ள தாகவும், முறைப்படியே வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.