பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நான்காம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவன் டியூசன் சென்ற போது, 17, 14, 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் நண்பர்களாக பழகியுள்ளனர்.இந்நிலையில், நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவனின் புகைப்படத்தையும், அவரது தாய் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவோம் என, மூன்று சிறுவர்களும் மிரட்டி சிறுவனிடம் பணம் கேட்டுள்ளனர்.சிறுவனும் பயந்து, பெற்றோருக்கு தெரியாமல், அவ்வப்போது, 1,000, 2,000 ரூபாய் என பணத்தை மூவரிடமும் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த, 10 ஆயிரம் ரூபாய் காணவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் மிரட்டி கேட்டபோது, நடந்த சம்பவத்தை சிறுவன் தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை, பொள்ளாச்சி கிழக்கு போலீசாரிடம் புகார் கொடுத்தார். விசாரித்த போலீசார், மூன்று சிறுவர்கள் மீது 'போக்சோ', அச்சுறுத்தி பணம் பறித்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், ஆபாச படங்களை சிறார்களிடம் காண்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மூன்று சிறுவர்களை பிடித்த போலீசார், கோவை கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர்.