கோவை:நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிங்காநல்லுார் - வெள்ளலுார் ரோட்டில் தற்காலிக பாலம், இரண்டாம் முறையாக நேற்று அடித்துச் செல்லப்பட்டது.சிங்காநல்லுாரில் இருந்து வெள்ளலுார் செல்லும் ரோட்டில் உள்ள தரைமட்ட பாலத்துக்கு மாற்றாக, புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால், வாகன போக்குவரத்து பாதிக்கக் கூடாது என்பதற்காக, தற்காலிக குழாய் பாலம் அமைக்கப்பட்டிருந்தது.கடந்த மாதம் மழை பெய்தபோது, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தற்காலிக பாலம் அடித்துச்செல்லப்பட்டது. தண்ணீர் வற்றியதும், மீண்டும் குழாய் பதித்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. கோவையை சுற்றிலும் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளம் செல்கிறது. இதில், இரண்டாம் முறையாக தற்காலிக பாலம் நேற்று அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.விவசாயிகள் கூறுகையில், 'ஒட்டர்பாளையம் தடுப்பணையை கடந்து செல்லும் தண்ணீரால் பாலத்தில் அரிப்பு ஏற்படுகிறது. தடுப்பணையில் உள்ள மதகை திறந்து, வாய்க்காலில் தண்ணீரை திறந்து விட்டால், 3 கி.மீ., துாரத்தில் உள்ள இன்னொரு தடுப்பணைக்குச் செல்லும். கழிவுகளால் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் மதகு திறக்கப்படாமல் இருக்கிறது. அடைப்புகளை அகற்றி, மதகை திறந்து, வாய்க்காலில் தண்ணீர் அனுப்பினால் இப்பிரச்னை வராது' என்றனர்.