கோவை:சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் - கேரள மாநில அரசு செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்த, குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் கேரள நீர்ப்பாசனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.கோவை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை கேரள வனப்பகுதியில் உள்ளது; இதன் உயரம், 50 அடி. சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைகளில், 5 அடி குறைவாக, நீர் இருப்பு வைக்க அம்மாநில அரசு கொள்கை அளவில் முடிவெடுத்து உத்தரவிட்டது.அதன்படி, சிறுவாணியில், 45 அடிக்கு நீர் இருப்பு வைக்கப்படுகிறது. சமீபகாலமாக அம்மாநிலத்தில் உள்ள மற்ற அணைகளில் முழு கொள்ளளவு தேக்கப்பட்டு நீர் நிரம்பி வழிகிறது; சிறுவாணியில் மட்டும் தேக்குவதில்லை. கடந்த மாதம், 45 அடியை நெருங்கியபோது, தமிழகத்துக்கு தகவல் தெரிவிக்காமல், கேரள நீர்ப்பாசனத்துறையினர் தன்னிச்சையாக மதகுகளை திறந்து, 8 அடி தண்ணீரை வெளியேற்றியதால், நீர் மட்டம், 37 அடியாக குறைந்தது.இது, தமிழக அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது, கன மழை பெய்வதால் அணையின் நீர் மட்டம் மெல்ல உயர்கிறது. தண்ணீரை திறந்து விட்டு விடக்கூடாது என்பதற்காக, குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், நிர்வாக பொறியாளர் மீரா, உதவி நிர்வாக பொறியாளர் பட்டன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சிறுவாணி அணைக்கு சென்றனர்.கேரள மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக பொறியாளர் லிவின் பிரபுவை நேரில் சந்தித்து, 'தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியபடி, அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு நீர் தேக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.அதற்கு, 'பாதுகாப்பு காரணங்களால் தற்போதைக்கு, 45 அடிக்கே தேக்க முடியும். கேரள அரசால் அணை பாதுகாப்பு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு ஆய்வு செய்து முழு கொள்ளளவு தேக்க அனுமதி அளித்து அறிக்கை சமர்ப்பித்தால் மட்டுமே தேக்க முடியும். இரு மாநில அரசு துறை செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தச் சொல்லுங்கள்' என, நீர்ப்பாசனத்துறையினர் பதிலளித்திருக்கின்றனர்.அதுவரை, '45 அடி வரையாவது நீரை தேக்க வேண்டும்; அதற்குள் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றக் கூடாது' எனக்கூறி விட்டு தமிழக அதிகாரிகள் திரும்பினர். நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 86 மி.மீ., அடிவாரத்தில், 44 மி.மீ., மழை பதிவானதால், நீர் மட்டம், 43 அடியாக உயர்ந்திருக்கிறது.