மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய்களின் பெருக்கம் அதிகமாகியுள்ள அதேநேரத்தில் நாய்கள் விபத்தில் அடிபடும்நிலையும் அதிகரித்து வருகிறது.எல்லீஸ்நகர், எஸ்.எஸ்.காலனி, கூத்தியார்குண்டு, தென்பரங்குன்றம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஜூலையில் மட்டும் 30 நாய்கள் இரவில் விபத்துக்குள்ளானதாக விலங்குகள் நல ஆர்வலர் மயூர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மதுரையில் நாய், குதிரை, ஜல்லிகட்டு மாடுகள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாகி விட்டது. தெருவிளக்குகள் இல்லாதது, குடித்து விட்டு வேகமாக வண்டி ஓட்டுவது போன்ற காரணங்களால் ரோட்டை கடக்கும் நாய்கள் விபத்துக்கு இலக்காகின்றன.நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே இருட்டான பகுதியில் ஜல்லிகட்டு மாடு விபத்துக்குள்ளானது.
உரிமையாளர் தெரியாத நிலையில் மாடக்குளம் ஜல்லிகட்டு பயிற்சியாளர் ஸ்டாலின் மூலம் மாட்டை தல்லாகுளம் அரசு கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அடிபடும் நாய்களுக்கு இங்கேயே தங்குமிடத்துடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.தெரு நாய்கள் விபத்தில் அடிபடுவதை தவிர்க்க 'ரிப்ளெக்டர் காலர்' மாட்டியுள்ளோம். நாய்களுக்கு உணவு அளிப்பவர்கள் மூலம் 600 தெரு நாய்களுக்கு இந்த காலர் மாட்டியுள்ளதால் இரவில் வாகன வெளிச்சத்தில் அவை விபத்தில் இருந்து தப்பிக்கின்றன.
இனப்பெருக்கம் தான் இப்போதைய மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள நாய்களுக்கு செல்லுார், வெள்ளக்கல்லில் கருத்தடை மருத்துவமனை உள்ளது. கருத்தடையை தொடர்ந்து செய்தாலே நாய்களின் பெருக்கத்தையும் விபத்தையும் கட்டுப்படுத்தலாம் என்றார்.