வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-''நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இளைஞர்களிடையே தேச பக்தி உணர்வை ஏற்படுத்துவதற்கு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளன,'' என பிரதமர் மோடி பேசினார்.
நம் நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் கடந்த ஒரு ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா வரும், 15ல் நடக்கவுள்ளது. இந்த கொண்டாட்டத்துக்காக பிரதமர் மோடி தலைமையில் ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று புதுடில்லியில் நடந்தது.இதில் பிரதமர் மோடி பேசியதாவது:நம் மூவர்ணக்கொடி ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது; அது, நம் நாட்டிற்கு நேர்மறையான சிந்தனையையும், செழிப்பையும் கொண்டு வருகிறது.நம் நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள், மக்களிடையே தேச பக்தியை ஏற்படுத்தவும், பலமான தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வை இளைஞர்களிடையே உருவாக்கவும் பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
ஒற்றுமையான தேசமே, வளர்ச்சி அடைந்த தேசமாக திகழும் என்பதை அனைவரும் உணர வேண்டும். நமக்குள் ஒற்றுமை அதிகரித்து, 'ஒரே பாரதம், சிறந்த பாரதம்' என்ற உணர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சுதந்திர போராட்டத்தின் போது ஏற்பட்ட தேசபக்தி உணர்வை, தற்போதைய தலைமுறையினரிடம் விதைத்து, தேசத்தை கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும்.இன்றைய இளைஞர்கள் தான் எதிர்கால தலைவர்களாக உருவெடுப்பர். எனவே, நம் நாட்டின் கனவுகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான கடமை மற்றும் பொறுப்புணர்வை தற்போதே அவர்களுக்குள் புகுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.