இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': மாணவியரிடம் சில்மிஷம்: ஆசிரியருக்கு 79 ஆண்டு

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்மாணவியரிடம் சில்மிஷம்: ஆசிரியருக்கு '79 ஆண்டு'கோழிக்கோடு-பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கணித ஆசிரியருக்கு 79 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கண்ணுார் ஆரம்பப் பள்ளியில் கணித


இந்திய நிகழ்வுகள்

மாணவியரிடம் சில்மிஷம்: ஆசிரியருக்கு '79 ஆண்டு'


கோழிக்கோடு-பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கணித ஆசிரியருக்கு 79 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.latest tamil newsகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கண்ணுார் ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் கோவிந்தன் நம்பூதிரி, 50.இவர் கடந்த 2013 - 14ம் ஆண்டுகளில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்த நான்கு மாணவியருக்கு, வகுப்பறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிபதி முஜீப் ரகுமான் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் உத்தரவிட்டதாவது:கோவிந்தன் நம்பூதிரி, சிறுமியருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ், அவருக்கு 79 ஆண்டு சிறைத்தண்டனையும், 2.7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


லஞ்சம் கொடுத்த வழக்கில் தொழிலதிபர் மகன் கைதுபுதுடில்லி-துறைமுக உயரதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், ஒடிசாவின் மிகப் பெரும் தொழிலதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபல தொழிலதிபர் மகிமானந்த மிஸ்ரா, ஏற்றுமதி, ஷிப்பிங் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுஉள்ளார். இவருடைய 'ஒடிசா ஸ்டீவ்டோர்ஸ் லிமிடெட்' நிறுவனம், பாராதீப் துறைமுகத்தில் கோலோச்சி வருகிறது. சமீபத்தில் இந்த துறைமுகத்தில் பொருட்களை கையாளும்போது, அங்குள்ள 'கன்வேயர் பெல்ட்' இயந்திரத்தை, இந்நிறுவனம் சேதப்படுத்தியுள்ளது. இதை சீரமைக்க அதிக செலவாகும் என்பதால், துறைமுகம் வாயிலாகவே மேற்கொள்வது குறித்து நிறுவன உயரதிகாரிகள், துறைமுகத்தின் தலைமைப் பொறியாளர் சரோஜ் குமார் தாஸ் உடன் பேச்சு நடத்தினர்.

அப்போது தலைமைப் பொறியாளர், 60 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது. இதைத் தவிர, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை அந்த அதிகாரியின் பெயரில் வாங்குவதற்காக, கட்டுமான நிறுவனத்துக்கு முன்பணமாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பணத்தை சரோஜ் குமார் தாசின் இடைத் தரகரிடம் ஒப்படைக்கும்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சரோஜ்குமார் தாஸ், தொழிலதிபர் மகிமானந்த மிஸ்ராவின் நிறுவன அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக, மகிமானந்த மிஸ்ரா, அவருடைய மகன்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அவருடைய மகன் சர்சித் மிஸ்ரா, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிசிர் குமார் தாஸை நேற்று கைது செய்துள்ளனர்.


'அக்னிபத்' போராட்டத்தைதுாண்டிவிட்ட நக்சல் கைதுபாட்னா-ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும், 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக பீஹாரில் போராட்டங்களை துாண்டிவிட்ட நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு கடந்த ஜூனில், அக்னிபத் என்ற முப்படைகளுக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.பீஹாரில் நடந்த போராட்டத்தில் பல ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வன்முறை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்த வன்முறையால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு சொத்துக்கள், 2,000க்கும் மேற்பட்ட ரயில்கள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், பீஹாரின் லக்கிம்புர் நகரில், மனஷியாம் தாஸ் என்ற நக்சலைட் பதுங்கியிருப்பதாக பீஹார் போலீசாருக்கு, தெலுங்கானா மாநில போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், மனஷியாம் தாஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து பீஹார் போலீஸ் உயரதிகாரிகள் நேற்று கூறியுள்ளதாவது:கைது செய்யப்பட்ட மனஷியாம் தாஸ், நக்சலைட் அமைப்புடன் நீண்டகாலம் தொடர்புடையவர். இதன் மூத்த தலைவர்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்தது. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து பீஹாரில் நடந்த போராட்டத்தின்போது, ரயில்களுக்கு தீ வைக்கும்படி, போராட்டக்காரர்களை இவரும், இவருடன் தொடர்புடைய சிலரும் துாண்டிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த கைது நடவடிக்கையின் வாயிலாக, அக்னிபத் வன்முறை தொடர்பான விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தமிழக நிகழ்வுகள்

latest tamil news
ரூ.20 ஆயிரம் லஞ்சம்இன்ஸ்பெக்டர் கைதுசிவகங்கை:வழக்கை ரத்து செய்ய, 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம், மேலுார் கருக்காலங்குடியைச் சேர்ந்தவர் ஹக்கீம், 40. இவர் மீது இடப்பிரச்னை தொடர்பாக, மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இதுதொடர்பாக ஒரு வழக்கு, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும் பதிவு செய்யப்பட்டது. ஒரே குற்றத்திற்கு இரு இடங்களில் வழக்கு பதிவு செய்ய முடியாது. அப்படி செய்திருந்தால், ஏதாவது ஒரு இடத்தில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்.சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவில் பதிவான வழக்கை ரத்து செய்ய, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை ஹக்கீம் அணுகினார்.இன்ஸ்பெக்டர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கொடுக்க விரும்பாத ஹக்கீம், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.போலீசார் அறிவுரையில், ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாயை, சிவகங்கை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பெற்ற போது, கையும், களவுமாக சிக்கினார். அவரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.


மனைவி எரித்து கொலை: கணவனுக்கு ஆயுள்சிறைகோவை;மனைவி மீது கெரசின் ஊற்றி எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள்சிறை விதித்து கோவை தனிக்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், ஆனைமலை அருகே ரமணிமுதலிபுதுாரை சேர்ந்தவர் வேலுச்சாமி,80. இவரது மனைவி காளியம்மாள்,70. வேலுச்சாமிக்கு வயதாகிவிட்டதால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. அவருக்கு சொந்தமான வீடு மற்றும் காலியிடத்தை விற்க முடிவு செய்தார். திருமணமான அவரது மகள் ராஜேஸ்வரி, தந்தையிடமிருந்து இரண்டு லட்சம் ரூபாய்க்கு வீட்டை விலை பேசி, முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கிரயம் செய்தார்.இதற்கிடையில், காலியிடத்தில் ராஜேஸ்வரி சிறிய அளவில் புதிய வீடு கட்டி பால் காய்ச்ச தேதி குறித்தார். இதையறிந்த வேலுச்சாமி, மீதி பணம் ஒரு லட்சம் கேட்டு மகளிடம் தகராறு செய்தார். அப்போது காளியம்மாள், 'மகள் கஷ்டப்பட்டு வரும் நேரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்' என, சத்தம் போட்டார். இதனால் வீட்டில் பால் காய்ச்சுவதை தடுக்க, அவரது மனைவி காளியம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்.கடந்த 2020, ஆக., 28ல், பால் காய்ச்சுவதற்கு தயாராக இருந்த நிலையில், நள்ளிரவில் காளியம்மாள் துாங்கிகொண்டிருந்த போது, கெரசின் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்து விட்டு வேலுச்சாமி தப்பினார். கோட்டூர் போலீசார், வேலுச்சாமியை கைது செய்து, கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.


மனநலம் பாதித்த மகளை கொன்ற தம்பதிக்கு 'ஆயுள்'ஸ்ரீவில்லிபுத்துார்:மனநலம் பாதிக்கப்பட்ட, 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன், 45. இவரது மனைவி ரேவதி, 38; இன்ஜினியரிங் பட்டதாரியான இத்தம்பதிக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட, 9 வயது பெண் குழந்தை இருந்தது.கடந்த, 2018 அக்.,1ல் மகளுடன் தம்பதியர் ஸ்ரீவில்லிபுத்துார் நாகபாளையத்தில் உள்ள காத்தப்பசாமி குலதெய்வ கோவிலுக்கு வந்தனர். சுவாமி கும்பிட்ட பின், இருவரும் நீண்ட நேரம் கோவில் பின்புறம் உட்கார்ந்திருந்தனர்.சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு, கோவில் பொறுப்பாளர் காளிமுத்து அங்கு சென்று பார்த்தபோது, தங்கள் மடியில் சிறுமியை படுக்க வைத்து, வாயில் ஒரு திரவத்தை ஊற்றியுள்ளனர். காளிமுத்து அதனை தட்டி விட்டார். அது விஷம் என்பது தெரிய வந்தது. சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். முனீஸ்வரன், ரேவதி மீது மல்லி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மகிளா விரைவு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பகவதி அம்மாள் நேற்று தீர்ப்பளித்தார்.


latest tamil news
பெண்ணை கொன்று துாக்கில் தொங்கவிட்ட 3 பேர் கைதுதிருப்பூர்:திருப்பூரில் பெண்ணை கொன்று, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகைகளை கொள்ளையடித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன், 65. இவரது மனைவி முத்துலட்சுமி, 60. இரு மகன்களுக்கு திருமணமாகிவிட்டது.

கோபாலன், குமார் நகரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இரு தளம் கொண்ட கட்டடத்தில், 9 வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, தரைத்தளத்தில் தம்பதி வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, கோபாலன் வீட்டுக்கு சென்ற போது, முத்துலட்சுமி வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். பீரோவில் இருந்த, 10 லட்சம் ரூபாய், 42 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. 'சிசிடிவி' கேமரா பதிவில், சந்தேகப்படும் விதமான டூவீலரின் எண்ணை கொண்டு விசாரித்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் லாட்ஜில் தங்கியிருந்த, கரூரை சேர்ந்த அருண், 24, தஞ்சாவூரை சேர்ந்த அமரன், 23, ஈரோட்டை சேர்ந்த தினேஷ், 24 ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து, 9.82 லட்சம் ரூபாய், 42 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.போலீசார் கூறியதாவது:கைதான மூவரும் எலக்ட்ரீசியன்கள். கடந்த, 30ம் தேதி கோபாலன் வீட்டுக்கு 'பிளம்பிங்' வேலை செய்ய அருண் சென்றார். வீட்டில் தம்பதி மட்டுமே இருப்பதையும், பணப்புழக்கம் இருப்பதையும் தெரிந்து கொண்டார். அமரனையும், தினேஷையும் அருண் சந்தித்து, கோபாலன் வீட்டில் கொள்ளையடிப்பது தொடர்பாக திட்டமிட்டார். வேறொரு நண்பரிடம், டூவீலரை வாங்கி கொண்டு, மூவரும் கோபாலன் வீட்டுக்கு சென்றனர்.முத்துலட்சுமியை சந்தித்து, பிளம்பிங் உட்பட சில பணிகளை, முழுமையாக இன்னும் முடிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதை நம்பிய, முத்துலட்சுமி வீட்டுக்குள் அழைத்து சென்றார். உள்ளே சென்றவுடன் அவரது கழுத்தை நெரித்து கொன்று, அறையில் துாக்கில் தொங்க விட்டனர். பணம், நகையை கொள்ளையடித்து விட்டு, கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடி துாவி சென்றனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

ரூ.18 ஆயிரம் காலி

காட்டி கொடுத்தால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று நினைத்து முத்துலட்சுமியை கொலை செய்ததாக போலீசாரிடம் மூவரும் தெரிவித்தனர். மாலை, 4:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த இவர்கள், 20 நிமிடத்தில் வெளியேறினர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில், அன்றிரவு, புதிய ஆடைகளை எடுத்தனர். பெரிய ஹோட்டல் ஒன்றில், மது அருந்தி, 18 ஆயிரம் ரூபாயை ஜாலியாக செலவு செய்தனர். கொடுமுடியில் அறை எடுத்து தங்கிய மூவர் மறுநாள் தப்பி செல்ல இருந்த நிலையில், அதிகாலை, 2:30 மணியளவில் போலீசாரிடம் சிக்கி கொண்டனர்.


டிவி' மெக்கானிக்கை கொன்றவர் கல்லால் அடித்துக்கொலை:நத்தம் அருகே கொடூரம்நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் 'டிவி' மெக்கானிக் தங்கராஜாவை 41, பட்டாக்கத்தியால் குத்திக்கொன்ற உதயகுமாரை 24, கிராம மக்கள் கல்லால் அடித்துக் கொலை செய்தனர்.

லிங்கவாடியை சேர்ந்த தங்கராஜாவுக்கும், அப்பகுதி உதயகுமாருக்கும் நேற்று மதியம் 1:30 மணியளவில் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற உதயகுமார், ஊர் மந்தையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே பட்டா கத்தியால் தங்கராஜாவை முகம் மற்றும் உடலில் சரமாரியாக வெட்டினார்.

படுகாயமுற்ற தங்கராஜா சம்பவ இடத்தில் பலியானார். இதைகண்ட கிராமக்கள் சிலர், உதயகுமாரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்களை அவர் தாக்க முயன்றார். இதனால் சிலர் அவரை கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த உதயகுமார், நத்தம் அரசு மருத்துவமனையில் இறந்தார்.

இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.இரட்டை கொலையை அடுத்து எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., அருண் கபிலன் லிங்கவாடியில் விசாரணை மேற்கொண்டனர். பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயகுமாரை கல்லால் தாக்கிவர்களை போலீசார் தேடுகின்றனர்.


மருத்துவ கல்லுாரி கட்டுவதாக ரூ.4.5 கோடி வசூலித்து மோசடிகோவை:மருத்துவ கல்லுாரி கட்டுவதாகக்கூறி ஏமாற்றி பலரிடம், 4.5 கோடி மோசடி செய்த நபர் முன் ஜாமின் பெற்ற நிலையில் அவரது மகன் கைது செய்யப்பட்டார்.துாத்துக்குடியை சேர்ந்தவர் தேவசகாயராஜ். அங்கு லோடு மேனாக வேலை செய்து வந்தவர் கடந்த, 2015ல், கோவைக்கு குடிபெயர்ந்தார். குனியமுத்துார், கே.என்.ஜி., கார்டனில் குடும்பத்துடன் வசித்து வந்த தேவசகாயராஜ் ரியல் எஸ்டேட், திருமண புரோக்கர் தொழில் செய்து வந்தார்.

முக்கிய நபர்களுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த, 2019ல், பொள்ளாச்சி, கெடிமேடு பகுதியில், 'அன்னை தெரசா சேரிடபிள் டிரஸ்ட்' என்ற பெயரில் மருத்துவ கல்லுாரி கட்டுவதாகவும், அதில் முதலீடு செய்வோரை பங்குதாரரர்களாக சேர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தனர். ஆனால், மருத்துவ கல்லுாரி துவங்கவில்லை.பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டபோது, அவர்களிடம் ஏற்கனவே கையெழுத்து வாங்கிய ஆவணங்களை வைத்து வழக்கு போடுவதாக மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக, மாநகர குற்றப்பிரிவில், உடுமலையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் புகார் அளித்தார். விசாரணையில், 100க்கும் மேற்பட்டோரிடம், 4.5 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.தேவசகாயராஜை போலீசார் கைது செய்ய முயன்ற போது, முன்ஜாமின் பெற்றிருப்பதாக ஆவணங்களை காட்டினார். போலீசார் நீதிமன்ற உத்தரவு பெற்று அவரது வீட்டில் கடந்த, 14ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, 2.82 லட்சம் ரொக்கம், 685 கிராம் தங்க நகை, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

ஆவணங்களை பார்த்த போது, தேவசகாயராஜின் மகன் நவீனுக்கும், மோசடியில் தொடர்பு இருப்பது தெரிந்தது. நவீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில்,'கோடிக்கணக்கில் மோசடி செய்த பணத்தில் தேவசகாயராஜ், தனது மனைவி, மகன் பெயரில் லட்சக்கணக்கில் நகை, வாகனம், சொத்துக்கள் வாங்கியுள்ளார். நவீன் திருமணத்தை, 50 லட்சம் ரூபாய் செலவழித்து மிக ஆடம்பராக நடத்தியுள்ளனர். திருச்சியிலுள்ள தனியார் கல்லுாரியை வாங்குவதற்கு, 13 கோடி ரூபாயக்கு விலை பேசியுள்ளனர். இந்த வழக்கில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது, வேறு எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
07-ஆக-202219:21:42 IST Report Abuse
DVRR 79 ஆண்டு சிறைத்தண்டனையும், 2.7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஏன்???இப்படி இருக்குமோ 1) அவர் நம்பூதிரி என்பதாலா முஹம்மது ஜான் என்று இருந்திருந்தால் ஒருவேளை விடுதலை செய்திருப்பாரோ 2) வகுப்பறையில் பாலியல் தொல்லை அப்போ வகுப்பரையிலே குழந்தைகளின் உடையை களைந்து தன உடையையும் களைந்து பாலியல் தொல்லை கொடுத்தாரா?? 3) அவருடைய வயது 50 இன்னும் 20 வருடம் அவர் வாழ்வார் மிஞ்சி மிஞ்சி போனால் அவருக்கு 79 வருடம் தண்டனை என்றால் அவர் 129 வயது வரை வாழ்வார் என்று ஜாதக கட்டம் சொல்லுதா
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
07-ஆக-202217:45:26 IST Report Abuse
Vena Suna நம்பூதிரின்னா 79 வருஷம்,பாதிரியார்ன்னா நிரபராதி அங்கே.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
07-ஆக-202216:42:42 IST Report Abuse
sankar அதென்னங்க 79 வருஷம் கணக்கு? அதுவரைக்கும் இருப்பாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X