இனி, கேட்காது தண்டோரா சத்தம்!| Dinamalar

இனி, கேட்காது தண்டோரா சத்தம்!

Updated : ஆக 07, 2022 | Added : ஆக 07, 2022 | கருத்துகள் (8) | |
'இதனால்...சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...' இவ்வாறு ஓங்கி ஒலிக்கும் குரலுக்கும், அதற்கு இணையான 'தண்டோரா' சத்தமும் கேட்காத கிராம வீதிகள் இருக்க முடியாது.'தமிழகத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சி நிர்வாகம் நடைமுறையில் இருந்தது' என, வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.தொலைதொடர்பு சாதனங்கள் அறவே இல்லாத காலகட்டத்தில், கிராம ஊராட்சியின் முக்கிய

'இதனால்...சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...' இவ்வாறு ஓங்கி ஒலிக்கும் குரலுக்கும், அதற்கு இணையான 'தண்டோரா' சத்தமும் கேட்காத கிராம வீதிகள் இருக்க முடியாது.'தமிழகத்தில், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளாட்சி நிர்வாகம் நடைமுறையில் இருந்தது' என, வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.

தொலைதொடர்பு சாதனங்கள் அறவே இல்லாத காலகட்டத்தில், கிராம ஊராட்சியின் முக்கிய அறிவிப்புகள், கொள்ளை நோய், பேரிடர் சமயங்களில் மக்களுக்கான அரசின் அறிவிப்பு, முன்னெச்சரிக்கை என, உடனுக்குடன் மக்களிடம் போய் சேர வேண்டிய விஷயங்கள் அனைத்தும், ஊராட்சி பணியாளர் மூலம் 'தண்டோரா' அடித்து சொல்லப்படும்.

'தண்டோரா' அடித்தபடி, ஊருக்குள் ஊராட்சி பணியாளர் வருகிறார் என்றால், 'ஏதோ ஒரு மிக முக்கியமான விஷயம் இருக்கிறது' என்பதை மக்கள் உணர்ந்து, காதுகளை கூர்மையாக்கி, ஊராட்சி பணியாளரை சூழ்ந்துகொள்வர்.தற்போதோ, தகவல் பரிமாற்றம் என்பது, நொடிப்பொழுது விஷயமாகிவிட்டது. வாட்ஸ்ஆப், மெசேஜ், டெலிகிராம், இ -மெயில் என, விரல் நுனிக்குள் தகவல் பரிமாற்ற வசதி வந்துவிட்டது.



latest tamil news



ஒலி பெருக்கி அறிவிப்பு, துண்டு பிரசுரம், பேனர் என, எவ்வளவோ தகவல் பரிமாற்றத்துக்கான காரணிகளும் வந்துவிட்டன. ஆனால், கிராம ஊராட்சிகளில், பழங்காலத்து தண்டோரா முறை இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கிறது.'தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், இனியும் வேண்டாம் தண்டோரா முறை' என அறிவித்திருக்கிறார் தலைமை செயலர் இறையன்பு.
சில குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூறுகையில், 'தண்டோரா சத்தம் கேட்டால், ஏதோ மிக முக்கிய அறிவிப்பு இருக்கிறது என்பதை, எங்கள் உள்மனம் தானாகவே உணர்ந்து கொள்ளும். தண்டோரா அறிவிப்பை, பின்பற்றியாக வேண்டும் என எண்ணம் ஆழ பதிந்துவிடும்' என்றனர்.

அவிநாசி கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் ரவிகுமார் கூறியதாவது:
சமீபத்தில் மக்களை அச்சுறுத்திய கொரோனா காலகட்டத்தில் கூட, தண்டோரா போட்டு தான், கிராம மக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினோம். ஒலி பெருக்கி பிரசாரம், பேனர், துண்டு பிரசுரம் மூலம் அறிவிப்பு செய்வதை காட்டிலும், தண்டோரா போட்டு சொல்லும் விஷயத்தை, மக்கள் அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர்; அதற்கு பழக்கப்பட்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

தற்போது ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள், வார்டு வாரியாக 'வாட்ஸ் ஆப்' குழு அமைத்து, தகவல் பரிமாற்றம் செய்து வருகின்றனர். வளர்ந்துவிட்ட தகவல் தொழில்நுட்பத்தில் தண்டோரா பயன்பாடு எந்தளவுக்கு அவசியம் என்பதை விவாதிப்பதை காட்டிலும், தண்டோரா அடித்து சொல்லும் விஷயம், மக்கள் மனதில் ஆணித்தரமாய் பதிந்தது என்று சொல்வதே சரியானது.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X