பெங்களூரு-பெங்களூரில், சில நாட்களாக மழை பெய்வதால் பைரஹொங்களா ஏரி நிரம்பியுள்ளது. பெங்களூரின் கழிவுகள், பிடதி பகுதி விவசாயிகளின் நிலத்தில் சேர்கிறது.பெங்களூரின் சில பகுதிகளின் கழிவு நீர் விருஷபாவதி ஆறு வழியாக, பைரஹொங்களா ஏரியில் சேர்கிறது. 34 நாட்களாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஏரி உடைப்பெடுத்து, கழிவு நீர் வெளியேறி ஆற்றில் கலக்கிறது.ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுப்பகுதி விவசாயிகளின் நிலத்தில் கழிவு நீர் சேர்ந்து, பயிர்களை நாசமாக்குகிறது.அபாயகரமான பிளாஸ்டிக், ரசாயன கழிவுகளும் விளை நிலங்களில் கலக்கின்றன. பிடதியிலிருந்து ஹாரோஹள்ளிக்கு தொடர்பு ஏற்படுத்தும் சாலையில், விருஷபாவதி ஆற்றுக்கு குறுக்கே உள்ள பாலம், குறுகலாகவும், பழையதாகவும் இருந்ததால், இதன் பக்கத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. ஏரியிலிருந்து பெருமளவில் நீர் வெளியேறுவதால், பாலம் கட்டும் பணிகளை நடத்த முடியவில்லை. கட்டுமான பொருட்களும் நீரில் அடித்து செல்லப்பட்டுஉள்ளன.பெங்களூரில் மழை பெய்தால், பெல்லந்துார் ஏரியில் நுரை பிரச்னை அதிகரிக்கிறது. பிடதி பைரஹொங்களா ஏரிக்கும், இதே சூழ்நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான கிராமங்களின் உயிர்நாடியான ஏரியில், இப்போதும் நுரை அதிகரிக்கிறது. இந்த நீரால், பயிர்கள் நாசமாகின்றன. இதை தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.