பல்லாரி,-அசுத்தமான குடிநீர் அருந்தியதால், அங்கனால் கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர், உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பல்லாரி, சன்டூரின் அங்கனால் கிராமத்தில், நேற்று குழாயில் வந்த குடிநீரில் அசுத்தம் கலந்திருந்தது. இதை அருந்திய 50க்கும் மேற்பட்டோர், உடல் நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கிராமத்தின் ஆய்வகத்தில், தண்ணீரை பரிசோதித்த போது, அசுத்தமடைந்தது தெரிந்தது.பல்லாரியின் கோனலில் இரண்டு வாரங்களுக்கு முன், அசுத்தமான நீரை அருந்தியதில், சிறுமி ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் அதிகமானோர் பாதிப்படைந்து, சிகிச்சை பெற்றனர். இந்த மாவட்டத்தில், இரண்டு வாரத்தில் மற்றொரு சம்பவம் நடந்ததால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோனலில் நடந்த சம்பவம், வேறெங்கும் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் டாக்டர்கள், சூழ்நிலையை கண்காணிக்கின்றனர். இவ்வளவு நடவடிக்கை எடுத்தும், மீண்டும் அசுத்தமான குடிநீரால் அசம்பாவிதம் நடந்துள்ளது.எந்த இடத்தில், குடிநீருடன் அசுத்த நீர் கலக்கிறது என கண்டுபிடிக்க, மாவட்ட நிர்வாகம் முயற்சிக்கிறது. தற்போது கிராமத்தினருக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில நாட்கள் இந்த வசதி நீடிக்கும். கொதித்து, ஆற வைத்த நீரை மட்டும் பயன்படுத்தும்படி, கிராமத்தினருக்கு உத்தரவிட்டுள்ளோம்.அங்கனால் கிராமத்தில், 20 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. பகல், இரவில் டாக்டர்கள் இருப்பர்.மருத்துவ ஊழியர்களுடன், மூன்று ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை தொடர்கிறது.கிராமத்தினர் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். யாருக்காவது உடல்நல பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக தற்காலிக மருத்துவமனைக்கு செல்லும்படி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.