'நீங்க அப்பவே செய்யலியே!'
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே, வனப்பகுதியில் மாயாற்றை ஒட்டியுள்ள தெங்குமரஹாடா வன கிராம மக்கள், ஆற்றை பாதுகாப்பாக கடக்க ஏதுவாக, முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், தன் சொந்த செலவில் விசைப்படகு வழங்கியுள்ளார்.
தெங்குமரஹாடாவில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, இப்பகுதி மக்கள் படும் சிரமங்கள் தெரிந்திருந்தால், உயர்மட்ட பாலம் கட்டிக் கொடுத்திருப்பேன். இப்போது எதிர்க்கட்சியாக உள்ளதால், உங்கள் கோரிக்கை குறித்து சட்டசபையில் பேசி தீர்வு காண்பேன்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'வனத்துறை அமைச்சராக இருந்தபோதே நீங்க செய்யலை; இப்போ எதிர்க்கட்சி வரிசையில இருக்கீங்க. உங்க பேச்சு எடுபடவா போகுது...' என, முணுமுணுக்க சக நிருபர்கள் கமுக்கமாக சிரித்தனர்.