கொள்ளிடம் ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு: அமைச்சர் ஆய்வு| Dinamalar

கொள்ளிடம் ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு: அமைச்சர் ஆய்வு

Added : ஆக 08, 2022 | கருத்துகள் (2) | |
மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படுகை கிராமங்களில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு
கொள்ளிடம் வெள்ளம், அமைச்சர் ரகுபதி,  வெள்ளப்பெருக்கு, Minister Raghupathi, kollidam flood,

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் 4வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படுகை கிராமங்களில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆனைக்காரன் சத்திரம் வழியே கொள்ளிடம் ஆற்றில் செல்லும் உபரி நீர் தேக்கிவைத்து பயன்படுத்த வழியின்றி கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக படுகை கிராமங்களான வெள்ள மணல், முதலை மேடு திட்டு, நாதல் படுகை உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் 45.4 ஹெக்டேர் விளைநிலங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கின.குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தில் இருந்து வெளியேறி கொள்ளிடம் ஆற்றின் கரையில் தங்கி உள்ளனர். சிலர் வருவாய்த்துறை அமைத்துள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இன்று (ஆக.,08) நான்காவது நாளாக கொள்ளிடம் ஆற்றில் படிப்படியாக குறைந்து ஒரு லட்சத்து 59 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இருந்தபோதிலும் படுகை கிராமத்து மக்கள் வழிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் சட்டம், நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் புகும் அபாயம் உள்ள காட்டூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அவர்கள் அளக்குடி கிராமத்தில் 2018ம் ஆண்டு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறையினரால் செய்யப்பட்டு வரும் கரை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அவர்கள் முதலை மேடு திட்டு மற்றும் நாதல் படுகை கிராமங்களுக்குச் சென்று பார்வையிட்டு மக்களிடம் நிலைமையைக் கேட்டறிந்ததுடன் அதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மேட்டூரில் இருந்து உபரி நீர் அதிகப்படியாக திறக்கப்பட்டுள்ளதாலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தொடர்ந்து 2 லட்சம் கன அடிக்கும் மேற்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் இந்த பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல் ஆற்றின் உள்ளே உள்ள மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கும், அந்தந்த பகுதியிலேயே நிரந்தரமான புயல் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தண்ணீர் மூழ்கி பாதிக்கபட்டுள்ள விளைநிலங்கள் குறித்து முழு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
பெயரை மாற்றி கூறிய அமைச்சர்


பேட்டி கொடுத்த அமைச்சர் ரகுபதி தன்னுடன் வந்தவர்களை பட்டியலிட்ட போது தொகுதி எம்எல்ஏ பாரதி என முன்னாள் அதிமுக எம்எல்ஏ.,வின் பெயரை குறிப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் எடுத்து சொன்னதை அடுத்து தொகுதி எம்எல்ஏ பன்னீர்செல்வம் என தனது கட்சி எம்எல்ஏ.,வின் பெயரை திருத்தி கூறினார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கால்நடைத் துறை சார்பில் பசும் புல் உள்ளிட்ட தீவணங்கள் வழங்கப்பட்டன. மேலும் பாதிக்கப்பட்ட படுகை கிராம மக்கள் 700 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X